தமிழ் சினிமா

அனைத்து ஹீரோக்களும் பெரிய கமர்ஷியல் ஹீரோவாக ஆசைப்படுவது ஏன்? - விஷ்ணு விஷால் பதில்

செய்திப்பிரிவு

ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை அனைத்து ஹீரோக்களுக்கும் இருக்கிறது என்று விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும், அவ்வப்போது தங்களுடைய பணி தவிர்த்து இதர திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல்வேறு நபர்களைப் பேட்டி எடுத்து வருகிறார். இவர் மாதவனை எடுத்த நேரலைப் பேட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு பல்வேறு நபர்களைப் பேட்டி கண்டவர், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலைப் பேட்டி எடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் கிரிக்கெட்டிலிருந்து எப்படித் திரையுலகம் பக்கம் வந்தேன், திரையுலகப் பயணம் உள்ளிட்டவை குறித்து அஸ்வினின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால். அதில் ஹீரோக்கள் கமர்ஷியல் படங்களில் நடிப்பதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:

"ஒரு பெரிய கமர்ஷியல் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை அனைத்து ஹீரோக்களுக்கும் இருக்கிறது. தான் வண்டியிலிருந்து இறங்கினால் என்னைப் பார்க்க ஒரு கூட்டமே நிற்கவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி யாருமே நினைக்கவில்லை என்று சொன்னால் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.

அதனால் பலரும் நான் உட்பட 2 நல்ல படங்கள் செய்துவிட்டு, சம்பந்தமே இல்லாமல் ஒரு கமர்ஷியல் படம் பண்ணுவோம். சில சமயங்களில் வெற்றி பெறும். சில சமயங்களில் தோல்வி அடையும். கமர்ஷியல் படங்களில் ஒரு ரிஸ்க் இருக்கிறது. அது மிஸ் ஆகவும் வாய்ப்புகள் உள்ளன. ஏன் பண்ணுகிறோம் என்றால் அனைவருக்குள்ளும் கமர்ஷியல் படங்கள் பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கிறது".

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT