தமிழ் சினிமா

'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை ஒப்புக்கொண்டது ஏன்? தயாரித்தது ஏன்? - விஷ்ணு விஷால் பகிர்வு

செய்திப்பிரிவு

'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை ஒப்புக்கொண்டது, தயாரித்தது ஏன் என்பதற்கான காரணத்தை விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும், அவ்வப்போது தங்களுடைய பணி தவிர்த்து இதர திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல்வேறு நபர்களைப் பேட்டி எடுத்து வருகிறார். இவர் மாதவனை எடுத்த நேரலைப் பேட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது. அதற்குப் பிறகு பல்வேறு நபர்களைப் பேட்டி கண்டவர், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலைப் பேட்டி எடுத்துள்ளார்.

அந்தப் பேட்டியில் கிரிக்கெட்டிலிருந்து எப்படித் திரையுலகம் பக்கம் வந்தேன், திரையுலகப் பயணம் உள்ளிட்டவை குறித்து அஸ்வினின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால்.

இதில் 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் வெற்றி, அதைத் தயாரித்தது ஏன் உள்ளிட்ட விஷயங்கள் குறித்துப் பேசியுள்ளார் விஷ்ணு விஷால்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

"நான் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவே 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' என்ற ஒரு படம் பண்ணினேன். கதையே இல்லாமல் நான் பண்ணிய படம் அதுதான். அது மிகப்பெரிய வெற்றி. அந்த மாதிரியான படங்கள் மீண்டும் மீண்டும் பார்க்கப்படும். அந்தப் படத்தில் நான் என்ன நினைத்தேனோ நடந்துவிட்டது.

"நீ கமர்ஷியல் படம் பண்ணினால் காணாமல் போய்விடுவாய்" என்று ஒரு தயாரிப்பாளர் என்னிடம் சொன்னார். அப்போதுதான் வித்தியாசமான படங்களாகப் பண்ணிக்கொண்டு இருக்கிறோமோ என்று நினைத்தேன். என்னை வைத்து 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை வேறு யாரும் தயாரிக்க மாட்டார்கள் என்பதால் நானே தயாரிப்பாளரானேன்.

அந்தப் படத்தில் நன்றாகச் சம்பாதித்தது மட்டுமன்றி, ஒரு நடிகராகவும் உயர்ந்தேன். அப்போதுதான் கமர்ஷியல் சினிமாவுக்குள் சென்று 'கதாநாயகன்' படத்தில் நடித்தேன். அது தோல்வியடைந்தது. கமர்ஷியலாகப் போகலாம் என்று போனபோது ஒரு படம் சரியாகப் போகவில்லை. 'கதாநாயகன்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதுதான் 'ராட்சசன்' படத்திலும் நடித்தேன்.

எனக்கு 'ராட்சசன்' மாதிரியான படங்கள்தான் பலம் என்று தெரியும். கண்டிப்பாக 'ராட்சசன்' வெற்றியடையும் என்று நம்பினேன். ஆனால், 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தை விட கமர்ஷியலாக பெரிய வெற்றி பெற்றது 'ராட்சசன்'. அப்படியென்றால் ரசிகர்களும் மாறுகிறார்கள் என்றுதானே அர்த்தம்".

இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT