'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு எப்படி வந்தது என்பது குறித்து விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் பிரபலங்கள் அனைவருமே சமூக வலைதளங்கள் மூலமாகத்தான் தங்களுடைய கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்கள். மேலும், அவ்வப்போது தங்களுடைய பணி தவிர்த்து இதர திறமைகளையும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் பல்வேறு நபர்களைப் பேட்டி எடுத்து வருகிறார். இவர் மாதவனை எடுத்த நேரலைப் பேட்டி பெரும் வரவேற்பைப் பெற்றது.
அதற்குப் பிறகு பல்வேறு நபர்களைப் பேட்டி கண்டவர், தற்போது நடிகர் விஷ்ணு விஷாலைப் பேட்டி எடுத்துள்ளார். அந்தப் பேட்டியில் கிரிக்கெட்டிலிருந்து எப்படித் திரையுலகம் பக்கம் வந்தேன், திரையுலகப் பயணம் உள்ளிட்டவை குறித்து அஸ்வினின் கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார் விஷ்ணு விஷால்.
இதில் தோல்வியிலிருந்து எப்படி மீண்டு வெற்றிக்குத் திரும்பினேன், 'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' ஆகிய படங்களில் நடிக்க எப்படி வாய்ப்பு வந்தது என்பது குறித்து விஷ்ணு விஷால் கூறியிருப்பதாவது:
"எனது 2-வது, 3-வது படம் ப்ளாப் ஆனவுடன், நமக்குப் பிடித்த மாதிரி படங்கள் வரும் வரை சும்மா கூட உட்கார்ந்திருக்கலாம் என்று முடிவு செய்தேன். அப்போது வந்த 11 படங்களை வேண்டாம் என்றேன். அனைத்துமே கமர்ஷியல், காமெடி என்று இருந்தாலுமே எதுவுமே வித்தியாசமாக இல்லை. சுமார் 1 வருடம் சும்மாவே இருந்தேன்.
பின்பு 'நீர்ப்பறவை'யைத் தேர்வு செய்தேன். ஏனென்றால் அந்தக் கதையில் ஒரு உண்மை இருந்தது. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டார்கள். அந்தப் படத்தின் மூலம் நல்ல பெயரும் கிடைத்தது. அதற்குப் பிறகும் கூட 7 படங்கள் வேண்டாம் என்று கூறி 6 மாதம் சும்மா உட்கார்ந்திருந்தேன்.
அந்தச் சமயத்தில் ஒரு ஹீரோ நண்பரைச் சந்தித்துப் பேசினேன். அப்போது அடுத்து இந்தப் படம் பண்றேன் என்று ஒரு கதை சொன்னார். சூப்பரான கதை. அன்று மாலையே வீட்டில் இந்த மாதிரி கதை ஏன் நமக்கு வருவதில்லை என்று நினைத்தேன். அதே கதை நான் நடிப்பதற்காக 2 மாதங்கள் கழித்து என்னிடமே வந்தது. அதுதான் 'முண்டாசுப்பட்டி'.
சி.வி.குமார் போன் பண்ணிச் சொன்னவுடன்தான் கதையைக் கேட்டேன். அதைக் கேட்கும்போது, இது அந்த ஹீரோ சொன்ன கதை ஆச்சே என்று நினைத்தேன். அப்போது இயக்குநர் ராம்குமாரிடம் "இந்தக் கதை அந்த ஹீரோ செய்ய வேண்டிய படமாச்சே" என்று கேட்டேன். அப்போது அந்தப் படத்தைத் தயாரிக்க இருந்தவரிடம் ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. ஆகையால், அதிலிருந்து வெளியே வந்துவிட்டேன். இப்போது இந்தத் தயாரிப்பாளருக்கு ஒப்பந்தமாகியுள்ளேன் என்று சொன்னார். உடனே என்னிடம் கதை சொன்ன ஹீரோவுக்கே போன் செய்து, நடந்த சம்பவங்களைச் சொன்னேன். அவரும் தாராளமாகப் பண்ணு என்று சொன்னார்.
இப்படி என் வாழ்க்கையில் 3, 4 படங்கள் அமைந்துள்ளன. ஒரு கதை என்னைத் தேர்வு செய்து வரும். அது அனைத்துமே வெற்றிப் படங்களாகவே அமைந்துள்ளன. ஏன் 'ராட்சசன்' படமும் அப்படித்தான். 17 நாயகர்கள், 22 தயாரிப்பாளர்கள் தாண்டி என்னிடம் வந்தது. பின்பு என்னிடமிருந்து போய்விட்டு, மீண்டும் என்னிடமே வந்தது. பின்பு படமாக உருவாகி பெரிய வெற்றி பெற்றது".
இவ்வாறு விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.