தனது நண்பர் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் வடிவேலு. இது தொடர்பான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் திரையுலகிலிருந்து விலகியே இருக்கிறார். இறுதியாக 2017-ம் ஆண்டு வெளியான விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவருடைய நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகவில்லை. இவர் நடித்த படங்கள் பட்டியலை எடுத்துப் பார்த்தால் சுந்தர்.சி, சுராஜ் உள்ளிட்ட சில இயக்குநர்களுடைய படங்களின் காமெடி இப்போது வரை ரசிக்கப்பட்டு வருகிறது.
சுராஜ் இயக்கத்தில் வெளியான 'தலைநகரம்', 'மருதமலை' ஆகிய படங்களின் காமெடியை வைத்து இப்போதும் பல மீம்ஸ்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. வடிவேலு - சுராஜ் இருவருமே நெருங்கிய நண்பர்களாக இருக்கிறது. சுராஜ் கடைசியாக இயக்கிய 'கத்தி சண்டை' படத்திலும் வடிவேலு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது முழுக்க வடிவேலுவை நாயகனாக வைத்தே கதையொன்றை எழுதியிருக்கிறார் சுராஜ். இது தொடர்பாக வடிவேலு - சுராஜ் இருவருமே அவ்வப்போது பேசியுள்ளனர். இந்த கரோனா ஊரடங்கில் இருவருமே அமர்ந்து பேசி, படம் பண்ணலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் வடிவேலு - சுராஜ் கூட்டணி தொடர்பான படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.