'குயின்' படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்குகள் ஓடிடி தளத்தில் வெளியிடப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘குயின்’. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை மனு குமரன் தயாரித்து வந்தார். தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’, தெலுங்கில் ‘தட்ஸ் மஹாலக்ஷ்மி’, கன்னடத்தில் ‘பட்டர்ப்ளை’, மலையாளத்தில் ‘ஜாம் ஜாம்’ என்று பெயரிட்டுப் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
தமிழில் காஜல் அகர்வால், தெலுங்கில் தமன்னா, கன்னடத்தில் பரூல் யாதவ் மற்றும் மலையாளத்தில் மஞ்சிமா மோகன் ஆகியோர் கங்கணா ரணாவத் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழ் மற்றும் கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த், தெலுங்கில் பிரஷாந்த் வர்மா, மலையாளத்தில் நீலகண்டா ஆகியோர் இயக்கியுள்ளனர்.
இந்தப் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டாலும், தணிக்கையில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் திட்டமிட்டபடி படம் வெளியாகவில்லை. தற்போது 'குயின்' படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்குகளை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்குப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது.
அமேசான் ஓடிடி தளம் இந்த ரீமேக்குகளைக் கைப்பற்றிவிட்டதாகவும், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.