தமிழ் சினிமா

கரோனா அச்சுறுத்தல்: 'ஜோஷ்வா' படப்பிடிப்பில் மாற்றம்

செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலால், கெளதம் மேனன் இயக்கி வரும் 'ஜோஷ்வா' படப்பிடிப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்குப் பிறகு கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஜோஷ்வா: இமை போல் காக்க'. வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வருண், ராஹி உள்ளிட்ட பலர் நடித்து வந்தார்கள்.

இதன் பெரும்பாலான பகுதி படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. பெரிய பணக்கார வீட்டுப் பெண் ஒருவரைக் கொல்ல முற்படுகிறார்கள். அவர்களைக் காப்பாற்ற ஒரு குழு செயல்படுகிறது. அந்தக் குழுவை தலைமையேற்று நடத்துபவன் தான் ஜோஷ்வா. அவன் அந்தப் பெண்ணை எப்படி காப்பாற்றினான் என்பதே 'ஜோஷ்வா' படத்தின் கதை.

இந்தக் கதையில் முதலில் வெளிநாட்டிலிருந்து நாயகி சென்னை வருவது போல கதைக்களம் இருந்தது. இதனால் வெளிநாட்டுக் காட்சிகளை இறுதியில் படமாக்கலாம் என்று திட்டமிட்டார்கள். தற்போது கரோனா அச்சுறுத்தலால் இந்தக் காட்சிகளைத் திட்டமிட்டது போல் வெளிநாட்டில் படமாக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால், இந்தக் காட்சிகள் அனைத்தையுமே வட இந்தியாவில் காட்சிப்படுத்த படக்குழு முடிவு செய்துள்ளது. இதற்காக சினிமா படப்பிடிப்புக்கு அரசு அனுமதியளித்தவுடன் வட இந்தியாவுக்கு பயணப்படவுள்ளது படக்குழு.

இந்தப் படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு, விக்ரம் நடித்து வரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார் கெளதம் மேனன்

SCROLL FOR NEXT