2014 ஜூலை 18 அன்று வெளியான திரைப்படங்களில் இரண்டு படங்கள் மிகப் பெரிய வணிக வெற்றியையும் விமர்சன ரீதியான பாராட்டையும் குவித்தவை. ஒன்று நடிகர் தனுஷ் திரை வாழ்வில் முக்கியமான படமான 'வேலையில்லா பட்டதாரி'. இன்னொன்று 'சதுரங்க வேட்டை'.
'சதுரங்க வேட்டை' படத்தில் ஒளிப்பதிவாளரும் ஒருசில திரைப்படங்களில் நடித்தவருமான நட்டி என்கிற நடராஜ் கதாநாயகனாக நடித்திருந்தார். ஹெச்.வினோத் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக தமிழ்த் திரைப்பட உலகுக்கும் ரசிகர்களுக்கும் அறிமுகமானார். 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'நேர்கொண்ட பார்வை' என அவர் இதுவரை இயக்கியுள்ள மூன்று திரைப்படங்களும் இன்று அவரை தமிழ்த் திரைப்படத் துறையிலும் ரசிகர்கள் மனங்களிலும் 'தரமான திரைப்படங்களைத் தரும் நல்ல இயக்குநர்' என்ற மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றன. நடிகர்-இயக்குநர் மனோபாலா இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார்.
புதுப் புது வழிகளில் தந்திரங்களைப் பயன்படுத்தி யாரையாவது ஏமாற்றி பெரும் பணம் பறிப்பவனின் கதைதான் 'சதுரங்க வேட்டை'. பொதுவாக எதிர்மறை நாயகர்களுக்கு எளிதாக ஒரு ஈர்ப்பு வந்துவிடும். எதிர்மறை நாயகர்களைக் கொண்ட பல படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற்றிருக்கின்றன. அதுவும் நாயகன் தன்னுடைய புத்திசாலித்தனத்தால் மற்றவர்களை ஏமாற்றுவதாகக் காண்பிக்கும் படங்கள் இன்னும் அதிக ஈர்ப்பைப் பெற்றுவிடும். ஏனென்றால் அவனுடைய செயல்கள் தவறானவை என்று பார்வையாளர்களுக்குத் தெரிந்தாலும் அதில் உள்ள மதிநுட்பம் அவற்றை ரசிக்கவைத்துவிடும்.
'சதுரங்க வேட்டை' படம் இதுபோன்ற புத்திசாலித்தனமான காட்சிகளால் நிரம்பியிருந்தது. அதே நேரம் நாயகன் இப்படி இருப்பதற்குச் சொல்லப்படும் பின்கதையும் நம் சமூகம் அவலங்கள் குறித்த முகத்திலறையும் உண்மையாக இருந்தது. இதுபோன்ற குற்றவாளிகள் உருவாவதற்கு பல அநீதிகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த நம் சமூகத்துக்குப் பங்கிருப்பதைப் பிரச்சார நெடியில்லாமல் சொல்லும் வகையில் அந்தப் பின்கதை அமைந்திருந்தது. அதை கார்ட்டூன் பாணியில் சொன்ன புதுமையும் ரசிகர்களை ஈர்த்தது.
மறுபுறம் ஏமாறுபவர்கள் எல்லோருமே அப்பாவிகள் அல்ல என்பதையும் 'சதுரங்க வேட்டை' வலுவாகப் பேசியது. குறுக்கு வழியில் அதிகப் பணம், சொத்து, கெளரவம் கிடைக்கும் என்ற பேராசையும் சுயநலமும் மூடநம்பிக்கைகளுமே இதுபோன்ற ஏமாற்றப்படுவதற்கான அடித்தளமாக அமைந்திருப்பதை 'சதுரங்க வேட்டை' அழுத்தமாகச் சுட்டிக்காட்டியது. இந்தப் பேராசைக்கு சாதி, மதம், பொருளாதார நிலை என எந்த விதிவிலக்கும் இல்லை என்பதையும். 'ஒருத்தன ஏமாத்தணும்னா மொதல்ல அவன் பேராசையைத் தூண்டிவிடணும்' என்ற ஒரே வசனம் இந்த விஷயத்தைக் கச்சிதமாகப் படம்பிடித்துக் காண்பித்தது.
இதேபோல பல ரசிக்கத்தக்க வசனங்களும் சுவாரஸ்யமான காட்சிகளும் நிரம்பிய திரைக்கதையே படத்தின் வெற்றிக்குக் காரணமானது. மற்றவர்களை ஏமாற்றிப் பணம் சேர்க்கும் நாயகனுக்கு உண்மையே கடவுள் என்று சொல்லி அதைப் பின்பற்றியும் வாழ்ந்த காந்தியின் பெயரை வைத்தது உட்பட பல சின்னச் சின்ன விஷயங்களில் இயக்குநரின் புத்திசாலித்தனம் பளிச்சிட்டது. இவை எதுவுமே வலிந்து திணிக்கப்பட்டதாக இல்லை என்பது முக்கியமான விஷயம்.
நட்ராஜ், கதாபாத்திரத்துக்கு ஏற்ற நடிப்பை மிகச் சிறப்பாகத் தந்திருந்தார். இவரைவிடப் பொருத்தமான தேர்வு இருந்திருக்கவே முடியாது என்னும் அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். நாயகியாக இஷாரா நாயர், நாயகனை மனதார நம்பும் அப்பாவியாகவும் அவன் திருந்தி நேர்மையாக வாழ்வதற்கான உந்துசக்தியாகவும் அமைந்த கதாபாத்திரத்தில் அழகாகப் பொருந்தினார்.
துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பெரும்பாலும் புதுமுகங்கள் அல்லது அதிக பிரபலமில்லாதவர்கள். எல்லோரும் தம் பங்களிப்பை சரியாகச் செய்திருந்தார்கள். ஷான் ரோல்டன் இசையில் பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. 'காதலா என் காதலை' என்கிற மெலடிப் பாடல் கேட்பவர்களின் காதுகளையும் மனங்களையும் வருடியது. தூய தமிழில் பேசும் தாதா, கடைசி நேரத்தில் பாசத்தால் மனம் மாறும் ரவுடி என மறக்க முடியாத கதாபாத்திரங்களும் படத்தின் ரசிப்புக்குரிய தன்மைக்கு வலுவூட்டின.
வெளியானபோது பாராட்டையும் வெற்றிகளையும் பெற்றதோடு எப்போது போட்டாலும் பார்க்க வேண்டும் என்று எண்ண வைக்கும் படங்களில் ஒன்றான 'சதுரங்க வேட்டை' ஹெச்.வினோத் என்கிற திறமை வாய்ந்த, தரமான இளம் இயக்குநரை தமிழ் சினிமாவுக்கு அளித்தது என்ற வகையிலும் முக்கியமான படமாகிறது.
அரவிந்த்சாமி - த்ரிஷா நடிப்பில் 'சதுரங்க வேட்டை 2' படம் தயாராகி வெளியாகக் காத்திருக்கிறது. ஹெச்.வினோத் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை நிர்மல் குமார் இயக்கியுள்ளார்.