இருபது ஆண்டுகளை நெருங்கும் நடிகர் தனுஷின் திரைவாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தி அவருடைய நட்சத்திர மதிப்பை பன்மடங்கு உயர்த்திய திரைப்படமான 'வேலையில்லா பட்டதாரி' வெளியான நாள் இன்று (2014, ஜூலை 18).
2011-ல் வெளியான 'ஆடுகளம்' படத்தின் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை வென்றார் தனுஷ். அந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றிபெற்றிருந்தது. அதை அடுத்து அவர் நடித்த 'மாப்பிள்ளை', 'வேங்கை', 'மயக்கம் என்ன', '3', 'மரியான்', 'நையாண்டி' ஆகிய படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதே நேரம் '3' படத்தின் 'கொலவெறி' பாடல் சர்வதேச கவனத்தை ஈர்த்தது. இந்தியா முழுவதும் அந்தப் பாடல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பாலிவுட் தனுஷை உற்றுநோக்கத் தொடங்கியது. 'ராஞ்சனா' என்னும் இந்திப் படத்தில் நடித்தார். தேசிய கவனம் பெற்ற படைப்பாளியான பரத் பாலாவின் 'மரியான்' படத்தில் நடித்தார். ஆனால் தமிழ் சினிமாவில் அவருடைய நட்சத்திர அந்தஸ்து கொஞ்சம் ஆட்டம் கண்டிருந்தது.
அந்த நேரத்தில்தான் 'வேலையில்லா பட்டதாரி' வெளியானது. 'ஆடுகளம்' உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தன் கல்விக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை கிடைக்காத சிவில் இன்ஜினீயரிங் பட்டதாரி ரகுவரனாக நடித்திருந்தார் தனுஷ். பெருங்கனவுகளுடன் பொறியியல் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் பொறியியலுக்கு சம்பந்தமே இல்லாத வேறு துறைகளில் வாழ்க்கைப் பாட்டுக்காக பணியாற்றுபவர்கள் எதிர்கொண்ட அவமானங்களின் வலியை, பிடித்த வேலையைச் செய்ய முடியாத ஏக்கத்தைப் பிரதிபலித்த முதல் தமிழ்த் திரைப்படம் 'வேலையில்லா பட்டதாரி', பொறியியல் மட்டுமல்லாமல் கல்வி வாய்ப்புகள் பெருகியதன் விளைவாக மனதுக்குப் பிடித்த பிரிவைத் தேர்ந்தெடுத்து படித்துவிட்டு ஆனால் அதற்கேற்ற வேலை கிடைக்காமல் வேறு துறைகளில் வேலை பார்ப்பவர்கள் அல்லது வேலை இல்லாமல் இருப்பவர்கள் அனைவரும் ரகுவரனுடன் தங்களை இணைத்துக்கொண்டனர்.
ஆனால், இவ்வளவு சீரியஸான விஷயத்தைப் பேசினாலும் படம் அழுது வடிவதாகவோ மெசேஜ் சொல்லும் படமாகவும் இல்லாமல் காதல், காமெடி, சென்டிமென்ட், மாஸ் காட்சிகள் என அனைத்தும் கச்சிதமாகக் கலந்த ஜனரஞ்சக கலவையாக அமைந்திருந்தது. குறிப்பாக சரண்யா பொன்வண்ணன், தனுஷுக்கு இடையிலான அம்மா - மகன் சென்டிமென்ட் காட்சிகளும் கண்டிப்பான அப்பாவான சமுத்திரக்கனியின் காட்சிகளும் வெகு சிறப்பாக அமைந்திருந்தன. முதல் முறையாக ஜோடி சேர்ந்த தனுஷ்-அமலா பால் கெமிஸ்ட்ரி இளைஞர்களைக் கவர்ந்தது. இரண்டாம் பாதியில் விவேக் - தனுஷ் நகைச்சுவைப் பகுதியும் வில்லன்களுடனான தனுஷின் மாஸ் காட்சிகளும் சண்டைக் காட்சிகளும் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தன.
இசையும் பாடல்களும் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணம். 'அம்மா அம்மா' என்ற மனதை உருக வைக்கும் சென்டிமென்ட் பாடலும் 'போ இங்கு நீயாக' என்ற அழகான காதல் பாடலும் 'வாட்ட கருவாடு' என்ற நாயக அறிமுகப் பாடலும் மிகப் பெரிய வெற்றிபெற்றன. தனுஷ் எழுதிய பாடல்வரிகளும் பாடல்களின் வெற்றிக்குப் பங்களித்தன. அனிருத்தின் பின்னணி இசையும் கச்சிதமாக அமைந்திருந்தது. குறிப்பாக நாயகனுக்கான 'ரகுவரன் தீம்' கல்ட் அந்தஸ்தை எட்டியது.
தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வொண்டர்பார் நிறுவன லோகோவைத் திரையில் காண்பிக்கும்போது ஒலிக்கவிடப்படும் இசையாக அமையும் அளவுக்கு தனுஷின் திரை வாழ்வில் ஒரு முக்கிய அடையாளமாகவே மாறிப்போனது. ரகுவரனைப் போலவே அவர் படிப்படியாக உழைத்து முன்னேறி இன்று அடைந்திருக்கும் நட்சத்திர அந்தஸ்தைக் குறிக்கும் அடையாளமாகவும் ரகுவரன் தீம் இசை அமைந்துவிட்டது.
இப்படியாக ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக இருந்ததால் 'வேலையில்லா பட்டதாரி' நூறு கோடிக்கு மேல் வசூலித்தது. விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது. தனுஷின் திரை வாழ்வில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. பல வகைகளில் தனுஷின் திரை வாழ்வில் மிக முக்கியமான வெற்றிப் படமாகவும் அவருடைய ரசிகர்களுக்கும் பொதுவான ரசிகர்களுக்கும் மறக்க முடியாத படமாகவும் அமைந்தது. எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் அதிக டி.ஆர்.பியைப் பெறுவதே இதற்குச் சான்று.
'ரகுவரன் பி.டெக்;' என்ற தலைப்பில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றிபெற்றது. கன்னடத்தில் 'பிரகஸ்பதி' என்ற தலைப்பில் ரீமேக் ஆனது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமான 'வேலையில்லா பட்டதாரி 2' படத்துக்கு கதை, திரைக்கதை, வசனத்தை தனுஷ் எழுத செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியிருந்தார். 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் முதல் பாகம் அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை.