தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு ஜூலை 9ம் தேதி 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.
உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளார்கள்.
இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :
கண்கண்ட தெய்வம் என்று சொல்லுவார்கள். நிஜமாகவே, என் கண்கள் கண்ட தெய்வம் கே.பி.சார். ஒரு மனிதனாக, மறக்க முடியாத மாமனிதர் பாலசந்தர் சார்.
நாம் நம்முடைய சிறுவயதில், எத்தனையோ படங்களைப் பார்த்திருப்போம். பார்த்து ரசித்திருப்போம். அந்தப் படங்களை இப்போது பார்க்கும்போது ஏதோ அந்த வயதுக்கு ரசித்திருக்கிறோம் என்று தோன்றும். அந்தச் சூழ்நிலைக்கு ரசித்துவிட்டோம் என்று தோன்றும். ஆனால் பாலசந்தர் சார் படங்கள் மட்டும்தான், அதற்கு ஒரு வயசோ, டிரெண்டோ, சூழ்நிலையோ எதுவுமே இல்லை. இன்றைக்கும் ரசிக்கும் படங்களாக, வியக்கும் படங்களாக இருக்கின்றன.
அவருடைய படங்களை எப்போது பார்த்தாலும் ‘லைவாக’ இருக்கிறது. அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களெல்லாம் நம்மைச் சுற்றி இன்னமும் வந்துக்கொண்டே இருக்கிறது. அதுதான் கே.பி.சார் சினிமா. பாலசந்தர் சார் சினிமாவுக்கு இணையான தமிழ் சினிமா இல்லவே இல்லை.
எல்லாக் காலத்துக்குமாக படங்கள் எடுத்த மாபெரும் தீர்க்கதரிசி பாலசந்தர் சார். அவருடைய பெருமையை, புகழை என் உயிருள்ளவரை பேசிக்கொண்டே இருப்பேன். அவருடைய நினைவு, என் நெஞ்சை விட்டு அகலாது.
கே.பி.சாருக்கு 90வது பிறந்தநாள். நாங்கள் ரொம்பவே அவரை மிஸ் பண்ணுகிறோம். அவருடைய பிறந்தநாளில், அவரை நெஞ்சாரப் பிரார்த்தித்து வணங்குகிறேன்.
இவ்வாறு அம்மா கிரியேஷன்ஸ் சிவா தெரிவித்துள்ளார்.