தமிழ் சினிமா

சி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி: சேரன் நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சி2எச் வெளியீட்டின்போது முதலில் பாராட்டியவர் ரஜினி என்று தனது ட்விட்டர் பதிவில் சேரன் நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காலத்தில், தங்களுடைய சமூக வலைதளத்தில் தொடர்ச்சியாக சில பிரபலங்கள் மட்டுமே இயங்கி வருகிறார்கள். அதில் முக்கியமானவர் இயக்குநர் சேரன். தன்னுடைய படங்கள் குறித்த ரசிகர்களின் கருத்துகள், தமிழக அரசின் செயல்பாடுகள், மின் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக்குமே உடனுக்குடன் குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது ரசிகர் ஒருவர் இயக்குநர் சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, " 'அருணாச்சலம்' (1997) படத்தின் 202-வது நாள் வெற்றிவிழா மேடையில் இயக்குநர் சேரனை 'பொற்காலம்' (1997) படம் கொடுத்ததற்காக மேடையில் அழைத்து தங்கச்சங்கிலி பரிசாக அணிவித்து அவரைக் கவுரவித்துப் பேசினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

மாற்றுத்திறனாளிளுக்கு வாழ்க்கை கொடுக்க வேண்டும் என்ற கருத்தை அழகாகச் சொல்லியிருந்த இயக்குநர் சேரனை இந்த மேடையில் வாழ்த்த ஆசைப்படுகிறேன் என்று கூறி 'பொற்காலம்' பட இயக்குநர் சேரனை அழைத்தார் ரஜினிகாந்த். இப்படிக் கூறியதைக் கேட்டு ஆனந்தக் கண்ணீருடன் நெகிழ்ச்சியாக மேடை ஏறி பரிசு பெற்றார் சேரன்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் இயக்குநர் சேரனுக்கும் உள்ள மிகப்பெரிய ஒற்றுமை இருவரின் பிறந்தநாளும் டிசம்பர் 12 ஆகும்" என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன் கூறியிருப்பதாவது:

"மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே பிரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர் சூப்பர் ஸ்டார். நல்லவற்றைத் தேடிப்பிடித்துப் பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே. C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாரப் பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூ சார்.

அவரோடு இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர. நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும் அப்படியேதான் இருக்கிறது. சிங்கப்பூரில் அவர் சிகிச்சைக்காக இருந்தபோது மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என என்னை அறியாமல் என்னுள்ளம் வேண்டியது. காரணம் அந்த மனிதத்தன்மை".

இவ்வாறு இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT