பழமையான முருகன் சிலையைத் திட்டமிட்டபடி கடத்தினார்களா, என்ன நடந்தது என்பதுதான் 'காக்டெய்ல்'
யோகி பாபு, கவின், மிதுன் மகேஷ்வரன் மற்றும் பாலா நால்வரும் நண்பர்கள். மிதுன் மகேஷ்வரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிவானதால், நண்பர்களுக்குத் தனது வீட்டில் பார்ட்டி கொடுக்கிறார். அப்போது அனைவருமே காக்டெய்ல் குடிக்கிறார்கள். காலையில் எழும்போது அந்த வீட்டில் ஒரு பெண் இறந்து கிடக்கிறார். எப்படி நடந்தது என்று யோசித்து, சடலத்தை அப்புறப்படுத்த நள்ளிரவில் காரில் ஏற்றிக் கொண்டு புறப்படுகிறார்கள். இந்தச் சம்பவத்துக்கு இடையே பழமை வாய்ந்த முருகன் சிலை ஒன்றை மைம் கோபி கடத்தத் திட்டமிடுகிறார். அவர்களும் முருகன் சிலையை ஏற்றிக் கொண்டு பயணிக்கிறார்கள். இந்த இரண்டு காரும் இரவில் ஒரு கட்டத்தில் சந்திக்கின்றன. பின் என்னவானது, பெண்ணைக் கொலை செய்தது யார் என்பதுதான் 'காக்டெய்ல்'
கதையாகக் கேட்கும்போது காமெடியாக இருக்கும் போலவே என்று நினைத்து உட்கார்ந்தால், மொக்கை ஜோக்குகள், சீரியல் தன்மையான காட்சிகள் என இயக்குநர் விஜய முருகன் முழுமையாக ஏமாற்றி இருக்கிறார். யோகி பாபு, கவின், மிதுன் மகேஷ்வரன் மற்றும் பாலா இவர்கள் நால்வரும் நண்பர்கள் என்பதற்கு முன், இவர்கள் நால்வரும் யார் என்ன வேலை செய்கிறார்கள் என்பதற்காக சில காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குநர். அதெல்லாம் கொடுமை.
வீட்டில் பெண் ஒருவர் இறந்து கிடக்கிறார் என்னும்போது, ஒவ்வொருவராக வீட்டிற்குள் வருவதும், அந்த சடலத்தை மறைப்பதும் எனப் பாதிப் படம் நகர்கிறது. ஒட்டுமொத்தப் படம் 2 மணி நேரம் 7 நிமிடங்கள். இதில் கடைசி 20 நிமிடங்கள்தான் கதையே, அதிலும் க்ளைமாக்ஸ் காட்சியில் முருகன் சிலையை வைத்துக் கொண்டு அடிக்கும் லூட்டியும் கொடூரத்தின் உச்சம். அதிலும் துப்பாக்கி எப்படி சுடணும் தெரியுமா என, காமெடி என்ற பெயரில் பேசியிருக்கிறார்கள்.
யோகி பாபு எதற்காக இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் என்பது அவருக்கே வெளிச்சம். அவருடைய காமெடி சுத்தமாக எடுபடவில்லை. அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலேயே சுமார் 50%க்கும் மேலான காட்சிகள் என்பதால் பட்ஜெட் குறைவு எனப் படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. 'கலக்கப்போவது யாரு' நடிகர்களை நடிக்க வைத்தால் காமெடி நன்றாக இருக்கும் என நினைத்திருக்கிறது படக்குழு. ஒரு கட்டத்தில் எப்போது பேசுவதை நிறுத்துவார்கள் எனத் தோன்றுகிறது.
படத்தில் 3 பேர் நாயகிகளாக வருகிறார்கள். அவர்கள் யோகி பாபு, கவின், மிதுன் மூவருக்கும் ஜோடி. அவர்கள் வரும் காட்சிகளை எல்லாம் விரல்விட்டு எண்ணிவிடலாம். இதில் மிதுன் காதலிக்கும் பெண்ணுக்கு அப்பாவாகவும், காவல்துறை அதிகாரியாகவும் சாயாஜி ஷிண்டே நடித்துள்ளார். பல முன்னணிப் படங்களில் நடித்தவர், ஏன் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்பதே தெரியவில்லை.
அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளைப் பெருமளவுக்குச் சிந்தித்து படமாக்கியிருப்பதை மட்டுமே பாராட்ட முடியும். அதில் கொஞ்சம் சுவாரசியத்தையும், காமெடியையும் சேர்த்திருந்தால் இன்னும் நல்ல கதையாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
காட்சிகள் சுவாரசியமின்மையால் ஒளிப்பதிவாளராக ரவீன் மற்றும் இசையமைப்பாளர் சாய் பாஸ்கரின் உழைப்பு எடுபடவில்லை.
இந்தக் கரோனா ஊரடங்கில் பொழுதுபோகவில்லை என்பதற்காக பலரும் ஓடிடி தளத்தில் படம் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இப்படி எல்லாம் படங்கள் வெளியானால், விரைவில் தமிழ்ப் படங்களின் வெளியீடு என்ன ஆகும் என்றே தெரியவில்லை. இந்த காக்டெய்லில் வெறும் தண்ணீர் மட்டும்தான் இருக்கிறது.