முன்னணி நடிகை த்ரிஷாவுக்கு மீரா மிதுன் தனது ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
'8 தோட்டாக்கள்', 'தானா சேர்ந்த கூட்டம்' உள்ளிட்ட சில படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவர் மீரா மிதுன். மாடலாக சில விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார். 'பிக் பாஸ்' சீஸன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவுடன், இவர் வைத்த குற்றச்சாட்டுகள் சர்ச்சையை உருவாக்கின.
இதனிடையே சமூக வலைதளத்தில் எப்போதுமே இயங்கி வரும் மீரா மிதுன், பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத்தைச் சாடி சில பதிவுகளை வெளியிட்டார். பின்பு தான் காதலில் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்தார். தற்போது த்ரிஷாவைச் சாடியுள்ளார் மீரா மிதுன்.
சில தினங்களுக்கு முன்பு த்ரிஷா தனது ட்விட்டர் பதிவில், புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்தப் புகைப்படம் தனது புகைப்படத்தைப் பார்த்து காப்பியடித்தது என்று மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மீரா மிதுன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இதுதான் உங்களுக்கு என்னுடைய கடைசி எச்சரிக்கை த்ரிஷா. அடுத்த முறை, என்னைப் போல் தெரியவேண்டும் என்பதற்காக உங்கள் புகைப்படங்களை என்னுடைய தலைமுடி, தோற்றம் போல போட்டோஷாப் செய்வதை நான் பார்த்தால், சட்டப்படியான நடவடிக்கையை நீங்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் செய்வது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். தயவுசெய்து வளருங்கள்".
இவ்வாறு மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.