நண்பர்கள், நடிகர்களைத் திரட்டிச்சென்று குறும்படம் எடுக்கும் வழக்கத்துக்கும் கரோனா வேட்டு வைத்துவிட்டது. இதனால் கரோனா காலத்தில் குறும்படங்கள் பிரசவிப்பதும் பெரிய அளவில் தேங்கிப் போனது.
இப்படியான சூழலில் கதாபாத்திரங்களை அவரவர் வீடுகளில் இருந்தபடியே நடிக்கவைத்து காட்சிகளைப் பதிவு செய்து, ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே சமயத்தில் திரையில் தோன்றாத வகையில் வித்தியாசமான ஒரு குறும்படத்தை இயக்கி இருக்கிறார் விஷ்ணு பரத்.
குமரி மாவட்டம், புலியூர்குறிச்சியைச் சேர்ந்த விஷ்ணு பரத் விவசாயத்தின் முக்கியத்துவத்தைப் பேசும் திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கான பணிகளில் இருந்தபோதுதான் கரோனா குறுக்கிட்டு, படவேலைகள் முடங்கின. இதனால் சென்னையில் இருந்து ஊருக்குத் திரும்பியவர் கரோனா கால நினைவாகக் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். இதில் ஒரு காட்சியில்கூட ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் திரையில் தோன்ற மாட்டார்கள். ஆனாலும் சுவாரசியம் குறையாமல் நகர்கிறது திரைக்கதை.
இது குறித்து ‘இந்து தமிழ்’ இணையத்திடம் பேசிய விஷ்ணு பரத், “நான் ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு எம்பிஏ படிச்சேன். சின்னவயசில் இருந்தே சினிமாத் துறையில் ஆர்வம் அதிகம். ஏழாம் வகுப்பு படிக்கும்போதே நானே நாடகம் எழுதி, நடிக்கவும் செய்வேன். மத்த பசங்கள்லாம் ஸ்கிரிப்ட்டுக்காக டீச்சர்கிட்ட நிப்பாங்க. அப்பவே டீச்சருங்க என்னை நல்லா எழுதுறேன்னு பாராட்டுவாங்க.
அண்மையில் ‘ழகரம்’ படத்தில் நடிச்சிருந்தேன். அதோட இயக்குநர் க்ரிஷ் இயக்கி தனியார் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ‘வீடு’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினேன். அது ரொம்ப நல்ல பேரைத் தந்துச்சு. அதைத் தொடர்ந்து விவசாயப் பிரச்சினைகளை மையப்படுத்தி நகைச்சுவைத் தொனியில், அதேநேரத்தில் விவசாயிகளை ஏய்ப்பவர்களுக்குச் சுளீரெனக் குத்தும் விதமாக ஒரு படம் பண்றதா இருந்தேன். அதுக்கான படப்பிடிப்புக்குக் கிளம்புற நேரத்தில்தான் கரோனா வந்துடுச்சு.
இப்போதைக்குப் படப்பிடிப்பைத் தொடங்க முடியாது என்று தெரிந்ததால் சொந்த ஊருக்குத் திரும்பிட்டேன். இங்க வந்ததும் சும்மா இருக்க விரும்பல. அதேசமயம் அரசாங்கம் சொன்ன கரோனா விதிகளைக் கடைப்பிடித்து ஒரு குறும்படம் பண்ணினால் என்ன என்று தோன்றியது. அதற்காக எனது நட்பு வட்டத்தில் சிலரிடம் பேசினேன். தோழிகள் அவர்களின் தோழிகளையும் அறிமுகப்படுத்தினாங்க. ஒருத்தரை ஒருத்தர் நேரில் சந்திக்க முடியாது என்பதால் நானே ஒவ்வொருத்தர் ரோலையும் நடித்துக் காட்டி வாட்ஸ் அப்பில் அனுப்பி வைச்சேன். அதை அப்படியே ஃபாலோ செய்து அவங்களே நடிச்சு கேமராவுல ஷூட் பண்ணி அனுப்புனாங்க.
நான் மட்டும்தான் தகுதியான கேமராவில் படத்தை எடுத்தேன். மத்தவங்க அவங்களோட செல்போன்லயே ஷூட் பண்ணி அனுப்புனாங்க. ஆக, நாங்க யாரும் ஒருத்தரை ஒருத்தர் சந்திக்காமலேயே, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்து ஒரு குறும்படத்தை வெற்றிகரமா எடுத்து முடிச்சுட்டோம்.
கருத்துச் சொல்லும் குறும்படங்கள் ஏற்கெனவே நிறைய எடுத்திருக்கிறேன். அதனால, இந்தப் படத்தை கரோனா காலத்தில் மக்களுக்குக் கொஞ்சம் மன இறுக்கத்தைப் போக்கலாமேன்னு யோசிச்சு ஜாலியா எடுத்திருக்கிறேன். படத்தைப் பார்த்துட்டு இயக்குநர் பாண்டியராஜன் சாரும், இயக்குநர் ஜான் மகேந்திரன் சாரும் பாராட்டுனாங்க. அது ரொம்ப நெகிழ்ச்சியா இருந்துச்சு. தொடர்ந்து இதோட அடுத்தடுத்த பாகங்களை ரிலீஸ் செய்யப் போறாம். அதையும் இதே பாணியில்தான் ஷூட் பண்ணப் போறோம்” என்றார்.
குறும்படத்தைக் காண: