சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அழகு' சீரியல் திடீரென்று நிறுத்தப்பட்டதால் ஸ்ருதி ராஜ் உள்ளிட்ட குழுவினர் அனைவருமே அதிர்ச்சியில் உள்ளனர்.
2017-ம் ஆண்டு முதல் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் 'அழகு'. இதில் ரேவதி, 'தலைவாசல்' விஜய், ஸ்ருதி ராஜ், சங்கீதா உள்ளிட்ட பலர் நடித்து வந்தனர். இந்த சீரியல் மூலமாகத்தான் ரேவதி சின்னத்திரைக்கு அறிமுகமானார்.
கரோனா ஊரடங்கிற்குப் பின் கடந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இதனிடையே, தற்போது இந்த சீரியல் ஒட்டுமொத்தமாகக் கைவிடப்பட்டுள்ளது. இதனை ஸ்ருதி ராஜ் தனது வீடியோ பதிவின் மூலம் உறுதி செய்துள்ளார்.
'அழகு' சீரியல் தொடர்பாக ஸ்ருதி ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
"நிறையப் பேர் 'அழகு' சீரியலை நிறுத்திவிட்டார்களா அல்லது இப்போதைக்கு இல்லையா என்று கேட்கிறீர்கள். உண்மை என்னவென்று சொல்கிறேன். கடந்த மாதமே என்னை 'அழகு' சீரியலில் நடிக்க அழைத்தார்கள். கரோனா அச்சுறுத்தலால் நான் செல்லவில்லை. ஏனென்றால் எனக்கு சைனஸ் பிரச்சினை இருக்கிறது.
ஆகையால், இந்த நேரத்தில் என்னால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இயலாது என்று சீரியல் குழுவினருக்கும் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்துக்கும் சொல்லியிருந்தேன். அவர்களும் என்ன பண்ணலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த மாதம் 8-ம் தேதியிலிருந்து படப்பிடிப்பு என்று கேள்விப்பட்டேன்.
'அழகு' டீம் எல்லாம் இணைந்து ஒரு வாட்ஸ்-அப் குரூப்பில் இருக்கிறோம். என்ன நடந்தது என்றெல்லாம் தெரியவில்லை. திடீரென்று 'அழகு' சீரியல் கைவிடப்பட்டதாகக் கேள்விப்பட்டேன். எனக்கே இது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. என்ன காரணமென்று தெரியவில்லை.
'அழகு' சுதாவை ஆதரித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சுதாவுக்காக நிறைய சமூக வலைதளப் பக்கங்கள், வீடியோக்கள் எல்லாம் போட்டீர்கள். அதற்கு ரொம்ப நன்றி. அடுத்தடுத்து சீரியலுக்குச் செல்லும்போது இதே ஆதரவு இருக்குமென்று நம்புகிறேன்.
'அழகு' சீரியல் மூலம் ரேவதி மேடம் மற்றும் தலைவாசல் விஜய் சாருடன் நடிக்க முடிந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக 'அழகு' குழுவினரை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்".
இவ்வாறு ஸ்ருதி ராஜ் தெரிவித்துள்ளார்.