பணத்திற்காக சிலர் செய்யும் நாசவேலை என்று 'ராஜாவுக்கு செக்' படத்துக்கான வரவேற்பு கிடைக்காதது தொடர்பாக இயக்குநர் சேரன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
சாய் ராஜ்குமார் இயக்கத்தில் சேரன், இர்ஃபான், சிருஷ்டி டாங்கே, சாராயூ உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ராஜாவுக்கு செக்'. ஜனவரி 24-ம் தேதி வெளியான இந்தப் படத்தை சோமன் மற்றும் தாமஸ் இணைந்து தயாரித்திருந்தார்கள். எஸ்.டி.சி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டது.
இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாக பெரிதாக எடுபடவில்லை. இந்தப் படத்துக்குக் கிடைத்த சில விமர்சனங்கள் நியாயமானவை அல்ல என்று இயக்குநர் சாய் ராஜ்குமார் சாடியிருந்தார்.
இதனிடையே, இந்த கரோனா ஊரடங்கில் தொடர்ச்சியாக தனது ட்விட்டர் பக்கத்தில் வரும் கருத்துகளுக்கு உடனடியாக பதிலளித்து வருகிறார் இயக்குநர் சேரன். அவ்வாறு 'ராஜாவுக்கு செக்' படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் "விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ஒரு திரைப்படம் வணிக ரீதியாகவும் வெற்றிகரமாக இருந்தால், அது சினிமா படைப்பாளர்களுக்கு 'ராஜாவுக்கு செக்' போன்ற தரமான கதைகளை உருவாக்க வழி வகுக்கும் இனிமேலாவது திருந்துவோம்" என்று சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுத் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக இயக்குநர் சேரன், "நன்றி. மக்களிடம் தவறில்லை. நல்ல படைப்புகள் மக்களைச் சென்றடையாமல் பணத்திற்காக சிலர் செய்யும் நாசவேலை இது. அதை உடைக்கத்தான் மீண்டும் மீண்டும் போராடுகிறோம். மக்களுக்கு நேரடியாக நல்ல படங்கள் சென்றடையும் காலம் மிக அருகில்" என்று தெரிவித்துள்ளார்.