தமிழ் சினிமா

’’கே.பி.சார் அறிமுகப்படுத்தியவர்களைப் பார்க்க பொறாமையா இருக்கும்’’ - கணேஷ் வெங்கட்ராமன் ஏக்கம்

வி. ராம்ஜி

தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு இன்று (ஜூலை 9) 90-வது பிறந்த நாள். ரஜினி, சரிதா, விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி, புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்ற கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதா சாகேப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.

உடல்நலக் குறைவால் 2014ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி கே.பாலசந்தர் காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி. பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இதன் வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.

இதில் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் வீடியோவும் வெளியிடப்பட்டது. இந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது :

பாலசந்தர் சார் படங்களை நிறையவே பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு படத்தையும் பல முறை பார்த்திருக்கிறேன். அவர் எடுத்துக் கொள்ளும் கதைகள், அதற்கு தகுந்த திரைக்கதைகள், வசனங்கள், ஒவ்வொரு கேரக்டர்கள், முக்கியமாக பாலசந்தர் சார் படங்களில் உள்ள பெண் கதாபாத்திரங்கள் எல்லாமே ரொம்பப் பிடிக்கும். அவ்வளவு அழகாக கிரியேட் செய்திருப்பார்.

அந்தக் காலத்தில், நடிகர்களின் படங்கள் என்று சொன்னார்கள். அதை இயக்குநர்களின் படம் என்று மாற்றிக் காட்டியவர் பாலசந்தர் சார்தான். நான் சினிமாவுக்கு வந்த போது, நிறைய பேரிடம் பேசும் போது, அவர்கள் சொன்னது வியப்பாக இருந்தது. பலரும் ‘நான் கே.பி.சார் ஸ்கூலிலிருந்து வந்தேன்’ என்றார்கள். சினிமாவில் மட்டுமில்லாமல், டிவியிலும் கூட ஏகப்பட்டபேரை அறிமுகப்படுத்தியுள்ளார். அதுமட்டுமா? பல டெக்னீஷியன்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ் என்று மட்டுமில்லாமல் பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவர்களையெல்லாம் பார்க்கும்போது, எனக்கு பொறாமையாக இருக்கும். நான் அந்த ஜெனரேஷன்ல வரவில்லையே... எனக்கு கே.பி.சார் மாதிரி ஒரு இயக்குநர் கிடைக்கவில்லையே என்று ஏக்கமாக இருக்கும்.

அவரின் படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது ‘அபூர்வ ராகங்கள்’. ஒவ்வொரு கேரக்டரும் சிறப்பாகச் செய்யப்பட்டிருக்கும். சமூகத்தின் எதிர்பார்ப்பு என்ன, கதாபாத்திர மனங்களின் முரண்கள் என்னென்ன என்றெல்லாம் அழகாகச் சொல்லியிருப்பார். ரொம்பவே பிடித்த படம் இது.

அதேபோல், ‘தில்லுமுல்லு’ படத்தில் இடம்பெற்ற ‘ராகங்கள் பதினாறு’ பாடல் மிகவும் பிடித்த பாடல். அதில், ரஜினி சாரை ரொம்பவே வித்தியாசப்படுத்திக் காட்டியிருப்பார். க்ளீன் ஷேவ் செய்த ரஜினி சார், காமெடி ரோல் பண்ணியிருப்பார். ரஜினியின் எக்ஸ்பிரஷன்ஸ் நன்றாக இருக்கும்.

அவருடைய சீரியல்கள், தனித்துவம் மிக்கவை. இன்றைக்கு யூடியூபில் அவற்றைப் பார்த்து ரசிக்கலாம்.

பாலசந்தர் சாரின் புகழ், இன்னும் பல மில்லியன் ஆண்டுகளானாலும் எல்லோராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இவ்வாறு கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT