தமிழ் சினிமா

நட்புக்காக எந்தவொரு விஷயத்திலும் இறங்கி விடுபவர் சிம்பு: இயக்குநர் வெங்கட் பிரபு

செய்திப்பிரிவு

நட்புக்காக எந்தவொரு விஷயத்திலும் இறங்கி விடுபவர் சிம்பு என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

சிம்பு நடித்து வரும் 'மாநாடு' படத்தை இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இதில் பாரதிராஜா, எஸ்.ஏ.சி, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சுரேஷ் காமாட்சி தயாரித்து வரும் இந்தப் படம் கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இந்தக் கரோனா ஊரடங்கில் மலேசிய வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் நேரலையில் கலந்துரையாடினார் இயக்குநர் வெங்கட்பிரபு. இதில் பல்வேறு பாடல்களைப் பாடி ரஜினி, கமல், விஜய், அஜித், சிம்பு உள்ளிட்டோர் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அந்த நேரலையில் சிம்புவின் புகைப்படத்தைக் காட்டியவுடன், இயக்குநர் வெங்கட் பிரபு கூறியதாவது:

"எனக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியும். 'சென்னை 28' படத்தின்போது நிறைய ஐடியாக்கள், எப்படி விளம்பரப்படுத்தலாம் என்பதுவரை சொன்னார். க்ளைமாக்ஸுக்கு முன்பு "சரோஜா சமாநிக்காலோ" என்ற குத்துப்பாட்டை வைக்கச் சொன்னது சிம்புதான். அந்தப் படத்தின் மதுரை விநியோக உரிமையை விற்றுக் கொடுத்தது சிம்புதான்.

'கோவா' படத்தின் க்ளைமாக்ஸில் மன்மதன் கதாபாத்திரத்தை வைத்து முடிக்க வேண்டும் என்று கேட்டவுடன், உடனே வந்து நடித்துக் கொடுத்தார். நீண்ட நாட்களாகவே பணிபுரிய வேண்டும் என்று திட்டமிட்டது இப்போது 'மாநாடு' படத்தில் அமைந்துள்ளது.

'மாநாடு' கதையை ஒன் லைனாகச் சொன்னேன். உடனே அவருக்குப் பிடித்துவிட்டது. முழுக்கதையையும் தயார் செய்து கூறினேன், அவருக்கு ரொம்பப் பிடித்துவிடவே படப்பிடிப்புக்குச் சென்றுள்ளோம். நிறையப் பேர் நிறைய விஷயங்கள் சொன்னார்கள். ஆனால், எனக்குப் படப்பிடிப்பில் எந்தவொரு பிரச்சினையுமே இல்லாமல் நடித்துக் கொடுத்தார்.

நிறையப் பேர் மாலைக்கு மேல் படப்பிடிப்பில் இருக்கமாட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், ஒரு முறை ஞாயிற்றுகிழமை மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை படப்பிடிப்பு செய்தோம். அப்போது இடையே திட்டுவார். "ஏன் சார் இரவெல்லாம் ஷூட்டிங் வைத்து டார்ச்சர் செய்கிறீர்கள்" என்று சொல்வார். ஆனால், முழுமையாக நடித்துக் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்.

எங்களுக்கு எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. இப்போது கூட புதிதாக சில விஷயங்கள் பேசுகிறோம். நட்பாக எந்தவொரு விஷயத்திலும் இறங்கிச் செய்வதில் அவர்தான் நம்பர் ஒன்".

இவ்வாறு இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT