பெயர், புகழ், நல்ல வசதியோடு வாழுவதற்கு காரணமே கே.பி சார் தான் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகின் ஆளுமைகளில் ஒருவரான இயக்குநர் கே.பாலசந்தருக்கு இன்று (ஜூலை 9) 90-வது பிறந்த நாளாகும். ரஜினி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நடிகர்களை அறிமுகப்படுத்தியவர். 'நீர்க்குமிழி', 'சர்வர் சுந்தரம்', 'இரு கோடுகள்', 'அவள் ஒரு தொடர்கதை', 'அபூர்வ ராகங்கள்', 'தண்ணீர் தண்ணீர்' உள்ளிட்ட பல்வேறு சிறந்த படங்களை இயக்கி புகழ் பெற்றவர். 9 தேசிய விருதுகள் வென்றுள்ள கே.பாலசந்தருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ மற்றும் தாதாசாகிப் பால்கே விருது ஆகியவற்றை வழங்கி கவுரவித்தது.
உடல்நலக் குறைவால் 2014, ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி காலமானார். இன்று கே.பாலசந்தரின் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள், பிரபலமானவர்கள் ஆகியோர் கே.பி பற்றிய நினைவலைகளைப் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ பதிவுகள் கே.பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது.
இதில் கே.பாலசந்தர் குறித்து ரஜினி கூறியிருப்பதாவது:
"இன்றைக்கு என் குருநாதர் கே.பி சாருடைய 90-வது பிறந்த நாள். கே.பாலசந்தர் சார் என்னை அறிமுகப்படுத்தவில்லை என்றால் கூட, நான் நடிகனாகியிருப்பேன். கன்னட மொழியில் வில்லன் கதாபாத்திரத்திலோ அல்லது சின்ன சின்ன கதாபாத்திரங்கள் நடித்து ஒரு சின்ன நடிகனா பாதையிலே போயிருப்பேன்.
நான் இன்றும் மேலும் பலரோட, ஆண்டவன் புண்ணியத்தில் பேரும் புகழோட நல்ல வசதியோடு வாழ்வதற்கு காரணமே கே.பாலசந்தர் சார் அவர்கள் தான். என்னை அவர் தேர்ந்தெடுத்து பெயர் வைத்து, என்னுடைய மைனஸ் எல்லாவற்றையும் நீக்கி என்னுடைய ப்ளஸ் என்ன என்பதை எனக்கே காட்டிக் கொடுத்து, என்னை ஒரு முழு நடிகனாக்கி, 4 படங்கள் ஒப்பந்தம் போட்டு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தான் என்னை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார். என்னுடைய வாழ்க்கையில் எனது அப்பா - அம்மா, வளர்ந்து ஆளாக்கிய அண்ணா, அதற்குப் பிறகு பாலசந்தர் சார் அவர்கள் தான். இவர்கள் 4 பேருமே 4 தெய்வங்கள்.
எனக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நடிகர்களுக்கு வாழ்க்கை கொடுத்திருக்கிறார். அவரால் வாழ்ந்தவர்கள் பல பேர். அவர் உயிரோடு இருக்கும் போது படம் இயக்கி, தயாரித்து பல பேருக்கு வேலையும் கொடுத்தார். அவர்களுடைய வாழ்வாதாரத்துக்குக் காரணமாகவும் இருந்தார். நான் எத்தனையோ இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன். இந்தியில் ரமேஷ் சிப்பி, சுபாஷ் கய் போன்றவர்கள். அப்புறம் 'உன்னிடம் மயங்குகிறேன்' என்று ஒரு படம் பண்ணினேன். அது வெளியாகவில்லை. பீம்சிங் அவர்கள் இயக்கிய போது உடம்பு சரியில்லாமல் போனது, அப்புறம் கிருஷ்ணன் பஞ்சு அவர்கள் இயக்கினார். அப்புறம் மணிரத்னம், ஷங்கர் என எத்தனையோ இயக்குநர்களுடன் பணிபுரிந்திருக்கிறேன்.
ஆனால் கே.பி சார் அரங்கிற்குள் வந்தால் நடிகர்கள் தொடங்கி லைட் பாய் வரை எழுந்து நின்று வணக்கம் வைப்பார்கள். அந்த மாதிரி ஒரு கம்பீரம் கே.பி சார்கிட்ட இருக்கும். அதை வேறு யார்கிட்டயும் நான் பார்த்ததில்லை. அவர் என் குரு என்பதற்காக இதைச் சொல்லவில்லை. அவர் மனித ஜென்மம் எடுத்து இந்த உலகிற்கு வந்து எல்லா கடமைகளையும் மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக அனைத்து வேலைகளையும் சரியாக செய்து ரொம்ப சீக்கிரம் காலமாகிவிட்டார்.
இன்னும் நிறைய நாட்கள் வாழ்ந்திருக்கலாம். நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார். அத்தனை பேருக்கு வாழ்க்கைக் கொடுத்த பெரிய மகான் அவர். அவருடைய இந்த 90-வது பிறந்த நாளில் அவரை நினைவுபடுத்திக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய ஆத்மா எங்கிருந்தாலும் நிம்மதியாக, சாந்தியாக இருக்கும்"
இவ்வாறு ரஜினி தெரிவித்துள்ளார்.