தமிழ் சினிமா

ஷாலினியைக் கடிந்துகொண்ட அஜித்: பின்னணி கூறும் பப்லு

செய்திப்பிரிவு

தன்னிடம் பேசாமல் சென்றதாக ஷாலினியை அஜித் கடிந்துகொண்டதாகப் பேட்டியொன்றில் பப்லு தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்பு நடிகராகவும் வலம் வந்தவர் பப்லு, பல்வேறு படங்களில் நடித்தவர் அஜித்துடன் 'அவள் வருவாளா' படத்தில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்து கொண்டார். அப்போது சர்ச்சையில் சிக்கினார்.

அதனைத் தொடர்ந்து சில காலங்கள் கழித்து, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இறுதியாக தமிழில் 'பயணம்' படத்தில் நடித்திருந்தார் பப்லு. இவர் அஜித்துக்கு நெருங்கிய நண்பராக வலம் வந்தவர். தற்போது சன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோது அஜித்துக்குப் புகழாரம் சூட்டினார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது:

"அஜித்தைப் பற்றி பல விஷயங்கள் அனைவருக்கும் தெரியும். என் தங்கையுடன் படித்தவர். அவரை பாடிகார்ட் மாதிரி பார்த்துக் கொண்டார். எனது 3-வது தங்கை படிப்பு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் கொஞ்சம் தாமதம்தான். அவர் பெயர் சோஃபியா. அவருக்கு இப்போது வரை அஜித்தின் பெர்சனல் எண் தெரியும். என்னை எங்கு பார்த்தாலும் 'சோஃபியா எப்படி இருக்கிறார்' என்றுதான் அஜித் கேட்பார். நீ எப்படி இருக்கிறாய் என்று கேட்கமாட்டார். இந்தத் திரையுலகில் இருக்கும் ஒரே ஜென்டில்மேன் அஜித் மட்டும்தான்.

கரோனா ஊரடங்கிற்கு முன்பு ஒரு ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றேன். அங்கு ஷாலினியும், அவருடைய மகளும் வந்திருந்தார்கள். நான் ஷாலினியுடன் பணிபுரிந்ததில்லை. நம்ம போய் 'ஹாய்' என்று சொல்லி, அவர் கண்டுகொள்ளவில்லை என்றால் தவறாக இருக்கும் என்று விட்டுவிட்டேன். இதே மாதிரி 2 முறை நடந்தது.

அடுத்த முறை ஹோட்டல்காரர், "உங்களிடம் ஷாலினி மேடம் பேச வேண்டுமாம். நம்பர் கேட்டார்" என்றார். ''கொடுக்கலாமா'' என்றவுடன். ''கொடுங்கள்'' என்று சொன்னேன். அவர்கள் நம்பர் கொடுத்த அடுத்த நிமிடம் ஷாலினி தொலைபேசியில் பேசினார்.

"மன்னிக்கவும் சார், உங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம் என்றுதான் பேசவில்லை. அஜித்திடம் இந்த விஷயத்தைச் சொன்னேன். ரொம்ப கோபித்துக் கொண்டார். என்னுடைய நண்பர், சீனியர் நடிகர், பள்ளியிலிருந்து எனக்கு சீனியர் ஏன் பேசாமல் வந்தாய்" எனக் கோபப்பட்டதாக ஷாலினி சொன்னார்.

இதை அஜித் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவர் அந்த அளவுக்கு ஜென்டில்மேன்".

இவ்வாறு பப்லு பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT