முன்னணி நடிகர்கள் சம்பளம் குறைக்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.
கரோனா ஊரடங்கினால் திரையரங்குகள் அனைத்துமே மூடப்பட்டதால், புதிய திரைப்படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. மேலும், 100 நாட்களுக்கு மேல் படப்பிடிப்புகளும் நடைபெறவில்லை. இதனால், தயாரிப்பாளர்களுக்குக் கடும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
எந்தவொரு பணியுமே நடைபெறவில்லை என்றாலும், பைனான்சியர்களுக்கு வட்டி கட்ட வேண்டிய சூழலுக்குத் தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் 30-க்கும் மேற்பட்ட முன்னணித் தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வேற்றுமைகள் அனைத்தையும் மறந்து, திரையுலகை மேம்படுத்த அனைவருமே ஒற்றுமையாகப் பேசியுள்ளனர். அப்போது பொருளாதார இழப்பைச் சரி செய்ய நடிகர்களின் சம்பளத்தை 50% வரை குறைக்கப் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தப் பேரழிவு சூழலால் தமிழ் சினிமா துறை பிரகாசிக்கப் போகிறது. நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், முக்கியத் தொழில்நுட்பக் கலைஞர்களின் 50% சம்பளத்தைக் குறைக்க முடிவு. ஏராளமான உச்ச நடிகர்கள் என்னிடம் பேசினார்கள். தயாரிப்பாளர்களை மகிழ்ச்சியுடன் மனமுவந்து ஆதரிக்கப்போவதாக என்னிடம் தெரிவித்தனர். இதற்குப் பெயர்தான் ஒற்றுமை".
இவ்வாறு ஜே.சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.