சுஷாந்த் சிங் மரணச் செய்தியைக் கேட்டவுடன் வெற்றிடத்தையும் வெறுமையையும் உணர்ந்தேன் என்று வேதிகா தெரிவித்துள்ளார்.
தமிழில் அர்ஜுன் நடித்த 'மதராஸி' படத்தின் மூலம் அறிமுகமானவர் வேதிகா. பின்பு 'முனி', 'காளை', 'பரதேசி', 'காவியத்தலைவன்' உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் இம்ரான் ஹாஸ்மி நடித்த 'தி பாடி' என்ற படத்தின் மூலம் இந்தியிலும் அறிமுகமானார் வேதிகா. சமீபத்தில் வேதிகா அளித்த பேட்டியில் சுஷாந்த் சிங் மரணம் தன்னை எந்த அளவுக்குப் பாதித்தது என்பதை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
"நான் சுஷாந்தை ஒரே ஒரு முறை, ஒரு நிகழ்வில் சந்தித்தேன். எனக்கு அவர் பரிச்சயம் கிடையாது. ஆனால், அவர் இறந்த செய்தி கேட்டதும் என் இதயத்தில் பெரிய வெற்றிடத்தையும் வெறுமையையும் உணர்ந்தேன். பிரகாசமான எதிர்காலம் இருந்த, அதிக திறமை இருந்த, ஒரு இளம் நடிகருக்கு இப்படியா என்று அதிர்ச்சியுற்றேன். அவரது பங்களிப்பு இன்னும் நிறைய இருக்கிறது என்று நினைத்தேன்.
அவருக்கு என்ன ஆனது, ஏன் இந்த முடிவை எடுத்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், வாழ்க்கை விலைமதிப்பற்றது. எங்களில் பலரால் அவரது கதையுடன் தொடர்புப்படுத்திப் பார்க்க முடிந்தது.
ஏனென்றால் நாங்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் எங்களுக்கான போராட்டங்களில் இருக்கிறோம். எங்கள் அனைவருக்குமே அவருக்கு வந்தது போன்ற ஒரு யோசனை வந்திருக்கலாம். ஆனால், நாங்கள் அதைக் கடந்து வந்திருப்போம்.
இந்தப் போராட்டங்கள், மன அழுத்தம் எல்லாமே தற்காலிகமானது. அதிலிருந்து நாம் மீள வேண்டும். அதற்கு நம் உயிரை விட்டுக் கொடுத்துவிடக்கூடாது. உங்கள் நடிப்பு, வெற்றி, தோல்வி என அனைத்தையும் பற்றிக் கருத்து கூற எல்லாத் தரப்பிலும் ஆட்கள் உள்ளனர்.
ஆனால், ஒருவர் எந்தத் தொழிலைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம். அவரைப் பற்றி மோசமாக எதாவது பேசுவதற்கு முன் சற்று யோசிக்க, நிதானிக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி".
இவ்வாறு வேதிகா தெரிவித்துள்ளார்.