தமிழ் சினிமா

உடல் எடையைக் குறைத்தால் வாய்ப்பு கிடைக்காது என்றார்கள்: வித்யுலேகா சாடல்

செய்திப்பிரிவு

உடல் எடையைக் குறைத்தால் வாய்ப்பு கிடைக்காது என்று பலர் தன்னிடம் சொன்னதாக வித்யுலேகா தெரிவித்துள்ளார்.

கரோனா ஊரடங்கில் புதிதாக வீட்டிலேயே பிஸ்கட் தயார் செய்து விற்பனை செய்கிறார் வித்யுலேகா. இதனுடன் தொடர் உடற்பயிற்சியின் மூலம் தனது உடல் எடையையும் கணிசமாகக் குறைத்துவிட்டார். உடல் எடையைக் குறைத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார் வித்யுலேகா. அதற்குப் பல்வேறு நாயகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, 2017-ம் ஆண்டு தனுஷ் இயக்கத்தில் வெளியான 'பவர் பாண்டி' படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கண்ணீர் மல்க வித்யுலேகா பேசினார். உருவத் தோற்றத்தை வைத்து கேலி செய்வதைப் பற்றிக் குறிப்பிட்டவர், அதை வழக்கமாக வைத்திருக்கும் துறையில் அப்படி ஒரு பாணியைப் பின்பற்றாததற்கு இயக்குநர் தனுஷைப் பாராட்டியிருந்தார்.

தற்போது உடல் எடையைக் குறைத்தது குறித்து 'தி இந்து' ஆங்கிலத்துக்கு வித்யுலேகா அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

"என் எடையைக் குறைத்தால் இன்று எனக்குக் கிடைக்கும் அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்காது என்று சொன்னார்கள். ஒருவரின் திறமையை அல்லாமல் தோற்றத்தை வைத்து நடிக்கும் வாய்ப்பு தரப்படும் கலாச்சாரத்தையே இது காட்டுகிறது. இப்படிச் சொல்லப்படும்போது ஒரு அச்சம் வரும். அதற்கான தீர்வு என்ன என்று எனக்குத் தெரியாது. ஆனால், உடல் அளவை விட திறமையே முக்கியம் என்பதில் பெண்கள் தொடர்ந்து நிரூபிப்பார்கள் என்று நம்புகிறேன்".

இவ்வாறு வித்யுலேகா தெரிவித்துள்ளார்.

தற்போது தெலுங்கில் பிரபாஸ் மற்றும் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் ஆகியோரின் படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வித்யுலேகா.

SCROLL FOR NEXT