தமிழ் சினிமா

இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே ரஜினி தான் மாஸ்டர்: விஜய் சேதுபதி

செய்திப்பிரிவு

இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே ரஜினி தான் மாஸ்டர் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நாயகனாக நடித்துக் கொண்டே ரஜினியுடன் 'பேட்ட' மற்றும் சிரஞ்சீவியுடன் 'சைரா' ஆகிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாயகனாக நடித்து வரும் வேளையிலேயே ரஜினி - சிரஞ்சீவியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

தற்போது கரோனா அச்சுறுத்தலில் நேரலை பேட்டியொன்று அளித்துள்ளார் விஜய் சேதுபதி. அதில் ரஜினி - சிரஞ்சீவியுடன் நடித்த அனுபவம் குறித்து விஜய் சேதுபதி கூறியிருப்பதாவது:

"இரண்டு படங்களுமே அவர்களுடன் பணிபுரிய வேண்டும் என்பதற்காக பண்ணினேன். இருவருமே 40 ஆண்டுகளுக்கும் மேல் நடித்து மக்களை கட்டிப் போட்டு வைத்துள்ளனர். அவர்கள் எப்படி வேலை செய்கிறார்கள், நடிக்கிறார்கள் என்பதை எல்லாம் நேரில் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக போனேன்.

ரஜினி சார் ரொம்ப சுறுசுறுப்பாக இருப்பார். நாம் என்ன பண்ணப் போகிறோம், அது திரையில் என்னவாக வரப்போகிறது, ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பது வரை தெரிந்து வைத்திருப்பார். ரஜினி சாரிடம் ஒரு மொக்கை காட்சியைக் கொடுத்தால் கூட அவர் பிரமாதப்படுத்திவிடுவார். அது ரொம்பவே ஆச்சரியமான விஷயம். அதே போல் ஒரு காட்சி நல்லபடியாக வந்துவிட்டால், இயக்குநர் சார் சூப்பர் என்று பாராட்டுவார்.

'பேட்ட' படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் 'பேட்ட பராக்' என்ற பாடல் பின்னணியுடன் மாடிபடி ஏறிப்போவார். அந்தக் காட்சி சென்னையில் தான் எடுத்தோம். அதை கார்த்திக் சுப்புராஜ் அரங்கில் சொன்னவுடனே, 'மாஸ் கமர்ஷியல்' என்று பாராட்டினார். எத்தனை வருஷமாக நடிக்கிறார், இதை என்னால் செய்துவிட முடியும் என்ற எதுவுமே இல்லாமல் ரசித்து அதை இன்னும் அழகாகக்க யோசிக்கிறார்.

கூட இருக்கும் நடிகர்கள் யார், நாம் இங்கு என்ன பண்ணுகிறோம் என்பதை வரை தெளிவாக இருப்பார். தன்னை திரையில் முன்னுருத்திவதில் அவர் மாஸ்டர். இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்குமே அவர் மாஸ்டர் தான்"

இவ்வாறு விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT