ஒரு ஈ ஒரு மனிதனைப் பழிவாங்கிக் கொல்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவார்களா? சிரித்துவிடக் கூடும் அல்லவா. ஆனால் வெள்ளித்திரையின் ஜாலத்தில் அதையும் நிகழ்த்திக்காட்ட முடியும், அனைவரையும் ஏற்க வைக்க முடியும் என்று நிரூபித்தது ஒரு திரைப்படம். தமிழில் 'நான் ஈ' என்றும் தெலுங்கில் 'ஈகா' என்றும் 2012 ஜூலை 6 அன்று வெளியான அந்தப் படம் இரண்டு மொழிகளிலும் மிகப் பெரிய வணிக வெற்றியையும் விமர்சகர்கள், ரசிகர்களின் பாராட்டையும் வாரிக் குவித்தது. தமிழ் மக்களிடையே பிரம்மாண்ட இயக்குநர் எஸ்,எஸ்,ராஜமெளலியை பிரபலமாக்கிய படமும் அதுதான்.
சமூக சேவையில் ஈடுபடும் இளம்பெண் மீது காமம் கொள்ளும் ஒரு பெரும் பணக்காரன் அதற்காக அவளது காதலனைக் கொல்கிறான். இறந்துபோன இளைஞன் ஈயாக மறுபிறவி எடுத்து காதலியின் துணையுடன் தன்னைக் கொன்றவனைப் பழிவாங்குகிறான் என்ற இரு வரிகளில் சொல்லிவிடக் கூடிய கதையை முழுக்க முழுக்க சுவாரஸ்யமான பரபரப்பான திரைக்கதை அமைத்து ரசிகர்களை அசரடித்திருந்தார் இயக்குநர் ராஜமெளலி. ஒரு தந்தை தன் குழந்தையைத் தூங்கவைப்பதற்காகக் கூறும் கதையின் வடிவத்தில் கதைக்குள் ஒரு கதையாக ஈயின் பழிவாங்கல் கதைக்கான திரைக்கதையை அமைத்ததன் மூலம் இப்படி எல்லாம் நிஜத்தில் நடக்குமா என்ற கேள்வியைப் பார்வையாளர்கள் மனங்களிலிருந்து ஓரங்கட்டிவிட்டார்.
ஆனால் அப்படிச் செய்துவிட்டதால் எதை வேண்டுமானாலும் காண்பிக்கலாம் என்ற அசட்டுத் துணிச்சலுடன் காட்சிகளை அமைக்காமல் கதையின் சட்டகத்துக்குள் அதாவது ஒரு ஈ மனிதனைப் பழிவாங்குவதற்குத் திட்டமிடுவது செயல்படுத்துவது பழிவாங்கலில் வெற்றி பெறுவது ஆகியவற்றுக்கான காட்சிகளை நம்பகத்தன்மையுடன் அமைத்திருந்தார். அதே நேரம் காதல், நகைச்சுவை, சென்டிமென்ட், வில்லனுக்கான மாஸ் காட்சிகள், ஈக்கான மாஸ் காட்சிகள் என அனைத்தையும் சரிவிகிதக் கலவையாக்கி முழுக்க முழுக்க சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதையை அமைத்திருந்தார். படமாக்கமும் கிராஃபிக்ஸ் பயன்பாடும் எந்த இடத்திலும் உறுத்தாத வகையிலான தொழில்நுட்பத் தரத்துடன் அமைந்திருந்தது. ஆர்.சி.கண்ணனின் விஷுவல் எஃபெக்ட்ஸும் கே.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவும் இதைச் சாத்தியமாக்கின.
அடிப்படையில் தெலுங்குப் படம். நாயகன், வில்லன் உட்பட படத்தில் நடித்த பெரும்பாலான நடிகர்கள் வேற்று மொழிக்காரர்கள். துணைக் கதாபாத்திரங்களில் நடித்த பலரும் தமிழ் ரசிகர்களுக்குப் பரிச்சயமானவர்கள் அல்ல. இவற்றையெல்லாம் தாண்டி தமிழில் மிகப் பிரம்மாண்ட வெற்றிபெற்றது இந்தப் படம். கதை-திரைக்கதைதான் அரசன் என்பதை மீண்டும் நிரூபித்தது.
இந்தப் படத்தில் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு இது முக்கிய தொடக்ககால வெற்றியாக அமைந்தது. தமிழ். தெலுங்கு இரண்டு மொழிகளிலும் ஆழமாகக் கால்பதிக்க உதவியது. இயக்குநர் ராஜமெளலியின் 'மகதீரா' தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு 'மாவீரன்' படமாக இங்கு வெற்றிபெற்றாலும் 'நான் ஈ' படத்தின் மூலமாகவே அவர் தமிழர்களிடையே பிரபலமடைந்தார்.
'நான் ஈ' அதற்குப் பிறகு ராஜமெளலி இயக்கிய மிகப் பிரம்மாண்டப் படங்களான 'பாகுபலி', 'பாகுபலி 2' படங்களுக்கு முன்னோடியாக அமைந்தது. 'பாகுபலி' படங்களில் தமிழுக்கும் தமிழ் ரசனைக்கும் முக்கியத்துவம் அளித்து அதிக தமிழ் நடிகர்களைக் கொண்டு உருவானதற்கு 'நான் ஈ' படத்துக்கு தமிழ் ரசிகர்கள் அளித்த மிகப் பெரிய வரவேற்பும் தமிழர்களிடையே ராஜமெளலி இயக்கும் படங்கள் மீது எழுந்த எதிர்பார்ப்புமே காரணம். 'பாகுபலி' படங்களின் மூலம் தமிழர்கள் மனங்களில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியத் திரைப்பட ரசிகர்களின் மனங்களிலும் மிகப் பெரிய உயரத்தை எட்டிவிட்டார் எஸ்.எஸ்.ராஜமெளலி.