விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தற்போது ஈசிஆரில் உள்ள வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். முன்னதாக, அவருடைய வீடு சாலிகிராமத்தில் இருந்தது. தற்போது அந்த வீட்டின் ஒரு பகுதியில் விஜய் ஆண்டனி வாடகைக்குக் குடியிருக்கிறார்.
இன்னொரு பகுதியை விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி. தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வருகிறார். நேற்றிரவு (ஜூலை 4) விஜய் வசிக்கும் வீடு என்று நினைத்து அந்த அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் நள்ளிரவில் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தினர். பின்பு, வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் தொடர்பான விசாரணை தொடங்கப்பட்டது. அதில் அவர் விழுப்புரத்தைச் சேர்ந்தவர் என்றும், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.