தமிழ் சினிமா

ஊரடங்கால் வேலையில்லை; மளிகைக் கடையை தொடங்கிய தமிழ் இயக்குநர்

ஏஎன்ஐ

உலகம் முழுவதும் கரோனா அச்சுறுத்தலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆங்காங்கே சிறிய சிறிய ஏற்படுத்தப்பட்டாலும் இன்னும் முழுமையான இயல்புநிலை திரும்பவில்லை. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமாத் துறையில் உள்ள நடிகர்கள் முதல் தினக் கூலி பணியாளர்கள் வரை அனைவரும் வேலையின்றி இருக்கின்றனர்.

இந்நிலையில் ‘ஒரு மழை நான்கு சாரல்’, ‘மௌன மழை’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சென்னை மவுலிவாக்கத்தில் மளிகை கடை வியாபாரத்தை தொடங்கியுள்ளார்.

இது குறித்து ஆனந்த் கூறியுள்ளதாவது:

ஊரடங்கினால் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டது. காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களுக்கு மட்டும் எந்த தடையுமில்லை என்று தெரியவந்தபோது, நானும் ஒரு மளிகைக் கடையை தொடங்க முடிவு செய்தேன். எண்ணெய், தானியங்கள், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து வருகிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

எப்படியும் இந்த ஆண்டு சினிமாத் துறை செயல்படப்போவது போல தெரியவில்லை. ஏனெனில் முதலில் மக்களின் பயம் விலக வேண்டும். பூங்காக்கள், மால்கள், கடற்கரை ஆகியவை திறக்கப்பட்ட பிறகுதான் திரையரங்குகள் திறக்கப்படும். அதன் பிறகு தான் எங்கெளுக்கெல்லாம் வேலை கிடைக்கும். அதுவரை நான் மளிகை வியாபாரத்தை பார்க்க முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தனது நண்பருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து அதில் மளிகைக் கடையை தொடங்கியுள்ளார் ஆனந்த்.

SCROLL FOR NEXT