'கோப்ரா' படப்பிடிப்புத் தளத்தில் விக்ரமுடன் இயக்குநர் அஜய் ஞானமுத்து | கோப்புப் படம். 
தமிழ் சினிமா

சம்பளத்தைக் குறைத்துக்கொண்ட 'கோப்ரா' இயக்குநர்

செய்திப்பிரிவு

'கோப்ரா' இயக்குநர் அஜய் ஞானமுத்து தானாக முன்வந்து சுமார் 40% சம்பளத்தைக் குறைத்துக் கொண்டார். இதற்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

விக்ரம் நடித்து வரும் 'கோப்ரா' படத்தை இயக்கி வருபவர் அஜய் ஞானமுத்து. இந்தப் படத்துக்கு முன்பாக 'டிமான்ட்டி காலனி' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கியுள்ளார். லலித் குமார் தயாரித்து வரும் படத்தில் இர்ஃபான் பதான், ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.

கரோனா அச்சுறுத்தல் தொடங்கி 100 நாட்கள் கடந்துவிட்டதால் எந்தவொரு பணியுமே நடைபெறவில்லை. இதனால் தயாரிப்பாளர்களுக்குக் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், இயக்குநர் ஹரி உள்ளிட்ட பலர் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர். அந்த வரிசையில் 'கோப்ரா' இயக்குநர் அஜய் ஞானமுத்துவும் 40% சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளார். இந்தத் தொகையே சுமார் 1 கோடி ரூபாயைத் தாண்டும் என்கிறார்கள்.

அஜய் ஞானமுத்துவின் இந்த முடிவுக்குத் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலரும் நன்றி தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT