சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக இயக்குநர் ஹரி வெளியிட்ட அறிக்கையை மறைமுகமாகச் சாடியுள்ளார் அருண் வைத்தியநாதன்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார், ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் இருவரையும் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட மகனும் தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இந்த விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது மர்மமான முறையில் உயிரிழந்திருக்கும் நிகழ்வை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டித்துள்ளன. தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக இயக்குநர் ஹரி, காவல்துறையைப் பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வேதனைப்படுவதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிக்கை இணையத்தில் பலராலும் பகிரப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் ஹரியை மறைமுகமாகச் சாடியிருக்கிறார் இயக்குநர் அருண் வைத்தியநாதன்.
இது தொடர்பாக அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
"நான் சாத்தான்குளம் சம்பவத்தைக் கண்டிக்கும் அதே அளவுக்கு, ஒட்டுமொத்தக் காவல்துறையும் மோசமானவர்கள், கொடூரமானவர்கள் என்ற பதத்தை நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன். கரோனா தொற்று பரவிய ஆரம்பத்தில் தமிழகம் முழுக்க பல நல்ல முயற்சிகள் காவல்துறையால் முன்னெடுக்கப்பட்டன என்பதை தயவுசெய்து மறந்துவிட வேண்டாம். சில கருப்பு ஆடுகளுக்காக ஒட்டுமொத்தக் காவல்துறையையும் பொதுமைப்படுத்திக் களங்கப்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
அத்தகைய கருப்பு ஆடுகள் எல்லாத் துறைகளிலும் உண்டு. அதிலும் குறிப்பாக, சினிமாவைச் சேர்ந்த சக நண்பர்கள் சிலர் காவல்துறையைப் பற்றிப் படம் எடுத்ததற்காகவும், காவல் அதிகாரி ரோலில் நடித்ததற்காகவும் வெட்கப்படுகிறேன் என்று கூறும் அளவுக்குச் செல்கிறார்கள். இதை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். இது ஒன்றும் சினிமா கதை அல்ல, சில லைக்குகளுக்காகவும், ரீட்வீட்களுக்காகவும் வார்த்தைகளை மிகைப்படுத்திச் சொல்வதற்கு. இதை ஒரு தனிப்பட்ட சம்பவமாகப் பார்க்கவேண்டும்.
இதன் உண்மைத்தன்மையை விசாரித்து இதற்குப் பின்னால் இருப்பவர்களைத் தண்டிக்க வேண்டும். ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். விரைவில் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன்".
இவ்வாறு அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.