தமிழ் சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் காக்டெய்ல்

செய்திப்பிரிவு

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'காக்டெய்ல்' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது.

கரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் மூடப்பட்டு இன்றுடன் 100 நாட்கள் ஆகின்றன. 'வால்டர்' மற்றும் 'அசுரகுரு' ஆகிய படங்களுக்குப் பிறகு எந்தவொரு படமும் திரையரங்கில் வெளியாகவில்லை. திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதால், படங்களை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் பெரும் நஷ்டத்தில் இருக்கிறார்கள்.

இதனால், தயாராகி இருக்கும் படங்கள் பலவும் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில் தமிழ்த் திரையுலகிலிருந்து முதலாவதாக ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்த 'பெண்குயின்' வெளியானது.

தற்போது ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா தயாரிப்பில் உருவாகியுள்ள 'காக்டெய்ல்' படம் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. ஜீ5 ஓடிடி தளத்தில் ஜூலை 10-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் முருகன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் யோகி பாபு, ரமேஷ், மிதுன், பாலா, குரேஷி, சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும், பி.ஜி.முத்தையா தயாரிப்பில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'டேனி' படமும் ஜீ 5 ஓடிடி தளத்தில் தான் வெளியாகவுள்ளது. ஆனால், அந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் முடிவாகவில்லை.

SCROLL FOR NEXT