தமிழ் சினிமா

முதல் பார்வை: பெண்குயின்

செய்திப்பிரிவு

தன் மகனைக் காப்பாற்றப் போராடும் தாயின் கதையே 'பெண்குயின்'.

6 வருடங்களுக்கு முன்பு கீர்த்தி சுரேஷின் குழந்தை கடத்தப்படுகிறது. அதற்குப் பிறகு ஏற்பட்ட மனக்கசப்பால், முதல் கணவரைப் பிரிந்து இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் கீர்த்தி சுரேஷ். இரண்டாவது முறையாக கர்ப்பாக இருக்கும்போது, கனவில் முதல் குழந்தையின் நினைவுகள் வந்துகொண்டே இருக்கின்றன. உடனே, குழந்தையைத் தொலைத்த இடத்துக்குச் செல்கிறார். திடீரென்று குழந்தையும் கிடைக்கிறது. அந்தச் சமயத்தில் வேறு ஒருவரின் பெண் குழந்தையும் காணாமல் போகிறது. குழந்தையை யார் கடத்தியது, ஏன் கடத்தினார்கள், இப்போது எப்படித் திரும்பக் கிடைத்தது, அதன் பின்னணி என்ன என்பதுதான் 'பெண்குயின்'.

கதையைக் கேட்க முழுக்க த்ரில்லர் பாணியில் சுவாரசியமாக இருக்கும் என நினைத்தால் தவறு. கதையைச் சுவாரசியமாக எழுதிவிட்டு, திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக். திரைக்கதையில் இன்னும் சில சுவாரசியங்களைச் சேர்த்திருந்தால் நல்லதொரு த்ரில்லர் களமாக இருந்திருக்கும். அதேபோல், படத்தில் வரும் பாதி விஷயங்களை சைரஸ் என்ற நாய்தான் கண்டுபிடிக்கிறது.

கர்ப்பமாகி இருக்கும் அம்மா கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் பிரமாதமாக நடித்திருக்கிறார். மகனைப் பறிகொடுத்துவிட்டுத் தேடுவது, மகன் கிடைத்தவுடன் உருகுவது, கர்ப்பமாக இருப்பதால் மெதுவாக நடப்பது, கொலைகாரனிடமிருந்து தப்பிப்பது என அவருடைய நடிப்புக்கு இந்தப் படம் நல்லதொரு தீனி. ஆனால், அவரைத் தாண்டி இந்தப் படத்தில் லிங்கா மட்டுமே சில இடங்களில் ஸ்கோர் செய்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே எடுபடவில்லை. அதிலும் ரங்கராஜ் அனைத்து இடங்களில் ஒரே மாதிரியான ரியாக்‌ஷனிலேயே இருப்பது சுத்தமாக எடுபடவில்லை.

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் ஒளிப்பதிவுதான். தமிழில் கார்த்திக் பழனியின் முதல் படமென்றாலும், கொடைக்கானலை அவ்வளவு அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். த்ரில்லர் களம் என்பதால் ஒளிப்பதிவில் வித்தியாசமான கோணங்கள், கொலைகாரனின் அறை என ஒளியில் விளையாடியிருக்கிறார். தமிழ் சினிமாவுக்கு நல்லதொரு வரவு.

த்ரில்லர் காட்சிகளுக்குத் தனது இசையில் மேலும் அழகு சேர்த்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன். த்ரில்லர் பாணியிலான படங்களில் வரும் இசையைக் கொஞ்சம் தவிர்த்து, ஒரு மெல்லிய இசையின் மூலம் மெருகூட்டியிருக்கிறார். ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை மட்டுமே ஒரு கட்டத்தில் நம்மைப் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது. கொலைகாரனின் வீட்டிற்குள் இருக்கும் அரங்குகள், காட்டுக்குள் இருக்கும் சிலை என கலை இயக்குநர் சக்தி வெங்கட்ராஜும் கவனிக்க வைக்கிறார்.

படத்தின் தொடக்கத்தில் நடக்கும் கொலை, பின்பு கொலைகாரன் அப்படியே தண்ணீருக்குள் போய் மறைவது என வித்தியாசமாகத் தொடங்கும் கதை நம்மைக் கட்டிப் போடுகிறது. பின்பு மெதுவாகப் பயணிக்கும் திரைக்கதை, அடுத்தடுத்த சுவாரசியங்களால் ஒன்றிவிட வைக்கிறது. பின்பு போகப் போக சுவாரசியம் இழந்து மிகவும் தடுமாறியிருக்கிறது திரைக்கதை.

குழந்தையைக் கடத்தியவர் வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும் நிலையில், அதை இறுதியில் விசாரணையின்போது மட்டும் சொல்வது ஏன், பேசாமல் இருக்கும் மகன் இறுதியில் பேசுவது எப்படி என நிறைய லாஜிக் மீறல்களும் படத்தில் உள்ளன. அதிலும் குழந்தையைக் கடத்தியது ஏன் என்று மாஸ்க்மேன் இறுதியில் சொல்வது அபத்தத்தின் உச்சம்.

ஒரு படத்தின் கதைக்கு, திரைக்கதைதான் எப்போதுமே குயின். அதில் மிகவும் தடுமாறிப் போயிருக்கிறது இந்தப் 'பெண்குயின்'.

SCROLL FOR NEXT