கூடிய விரைவில் குடும்பமாக ஒரு படத்தைப் பண்ணவுள்ளதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெண்குயின்'. இதில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், நித்யா கிருபா, ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் 'பெண்குயின்' வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கீர்த்தி சுரேஷ். அதில் 'பெண்குயின்' கதைக்களம், ஈஸ்வர் கார்த்திக் இயக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசினார்.
"அப்பா தயாரிப்பாளர், அக்கா இயக்குநர், அம்மா - பாட்டி நடிகை என்பதால் குடும்பப் படம் உருவாகுமா" என்ற கேள்விக்கு கீர்த்தி சுரேஷ் கூறியதாவது:
"குடும்பப் படம் கூடிய விரைவில் நடக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அக்கா கதை எழுதிக் கொண்டிருக்கிறார். அப்பாவும் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். இந்த லாக்டவுனில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். ‘பெண்குயின்’ கதையைப் படிப்பது மாதிரி ஒரு வீடியோ பார்த்திருப்பீர்கள். அது நாங்கள் குடும்பமாகப் படமாக்கியதுதான்.
அக்காதான் இயக்கினார். அப்பா - அம்மா - பாட்டி எல்லாம் உதவிகரமாக இருந்தார்கள். அப்போது பாட்டி, 'நான் நடிக்கும் போதுகூட 6 மணிக்கு மேல் எல்லாம் நடித்தது கிடையாது' என்றார். ஏனென்றால் நாங்கள் இரவு 2 மணிக்கு ஷூட் பண்ணினோம். 'இத்தனை நாளாக தயாரிப்பாளராக இருக்கிறேன். என்னை லைட்பாயாக ஆக்கிவிட்டாயே' என்று அப்பா கூறினார்".
இவ்வாறு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.