20% முதல் 30% வரை சம்பளக் குறைப்புக்குத் தயாராக இருப்பதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பெண்குயின்'. இதில் கீர்த்தி சுரேஷ், லிங்கா, மாதம்பட்டி ரங்கராஜ், நித்யா கிருபா, ஹரிணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
ஜூன் 19-ம் தேதி அமேசான் ப்ரைமில் 'பெண்குயின்' வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை விளம்பரப்படுத்த ஜூம் செயலி மூலமாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் கீர்த்தி சுரேஷ். அதில் 'பெண்குயின்' கதைக்களம், ஈஸ்வர் கார்த்திக் இயக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பேசினார்.
கரோனா அச்சுறுத்தலால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பைச் சரிசெய்ய நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்ற கருத்து உருவாகியிருப்பது தொடர்பாக கீர்த்தி சுரேஷிடம் கேட்ட போது, "சம்பளத்தைக் குறைத்துதான் ஆகவேண்டும். அனைவருமே குறைக்க வேண்டும். 20% முதல் 30% குறைக்க வேண்டும் என்கிறார்கள். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இப்போது பேசிக் கொண்டிருக்கும் அனைத்துப் படங்களுக்குமே சம்பளத்தைக் குறைத்துதான் பேசுகிறேன்" என்றார்.