கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ள படத்தின் தலைப்பு 'திறவுகோல் மந்திரவாதி' என்று தகவல் வெளியாகியுள்ளது.
'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார் விக்ரம். லலித் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் துருவ் விக்ரமும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தான், இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேற்று (ஜூன் 16) முதல் இந்தப் படத்தின் தலைப்பு 'திறவுகோல் மந்திரவாதி' என்று தகவல்கள் வெளியாகின. எப்படியென்று விசாரித்தால் கார்த்திக் சுப்புராஜின் விக்கிப்பீடியா பக்கத்தில், விக்ரம் படத்தின் பெயர்ப் பிரிவில் 'திறவுகோல் மந்திரவாதி' என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதை வைத்துதான் இந்தப் படத்தின் பெயர் 'திறவுகோல் மந்திரவாதி' எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாகப் படக்குழுவினர் தரப்பில் விசாரித்தபோது, "படமே இப்போதுதான் முடிவாகியுள்ளது. அதற்குள் யாரோ இப்படியொரு பெயரை விக்கிப்பீடியா பக்கத்தில் மாற்றியிருக்கிறார்கள். இது உண்மையல்ல" என்று தெரிவித்தார்கள்.
மீண்டும் கார்த்திக் சுப்புராஜின் விக்கிப்பீடியா பக்கத்தில் 'திறவுகோல் மந்திரவாதி' என்ற பெயர் 'சீயான் 60' என மாற்றப்பட்டுவிட்டது.
சமீபத்தில் 'பெண்குயின்' படம் தொடர்பாக நடைபெற்ற நேரலையில் கார்த்திக் சுப்புராஜ், விக்ரம் படம் தொடர்பாகக் கூறுகையில், "அந்தப் படம் இப்போது தொடக்க நிலையில்தான் இருக்கிறது. இன்னும் எதுவும் முடிவாகவில்லை. அந்தக் கதை எழுதும்போதே, விக்ரம் - துருவ் விக்ரம் இருவரையும் மனதில் வைத்துதான் எழுதினேன்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.