தமிழ் சினிமா

அஞ்சலி பிறந்த நாள் ஸ்பெஷல்: அசலான திறமைசாலி; ஆர்ப்பாட்டமில்லாத அழகி

எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவில் நடிப்பாற்றலால் அசத்திய நடிகைகளின் பட்டியலில் முக்கிய இடத்தில் வைக்கப்பட வேண்டியவரான அஞ்சலி இன்று தன் (ஜூன் 16) பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

ஒருசில தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டு இயக்குநர் ராமின் முதல் படமான 'கற்றது தமிழ்' படத்தின் நாயகி ஆனந்தியாக தமிழில் அறிமுகமானார். அந்தப் படத்தில் 'நெசமாத்தான் சொல்றியா' என்று வெள்ளந்தியாகக் கேட்கும் விதத்தில் ரசிகர்கள் மயங்கிப் போனார்கள். சிறுநகர ஏழைப் பெண்ணுக்கான கச்சிதமான தோற்றத்தையும் நடிப்பையும் வழங்கினார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சில விருதுகளையும் வாங்கினார்.

அடுத்ததாக வசந்தபாலன் இயக்கிய 'அங்காடித் தெரு' படத்தில் நாயகி கனியாக நடித்திருந்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பிழைப்புத் தேடி சென்னைக்கு வந்து மனிதத்தன்மையற்ற முதலாளிகளிடம் சிக்கித் தவிக்கும் எளிய மனிதர்களின் அவல நிலையை வெளிப்படுத்திய ஆவணமாக இருந்த இந்தப் படத்தில் நாயகி கனியாக மிகச் சிறப்பான நடிப்பைத் தந்திருந்தார் அஞ்சலி. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில அரசின் விருதைப் பெற்றார்.

அடுத்ததாக திறமை வாய்ந்த நடிகை என்பதற்காக சீரியஸான படங்களோடு முடங்கிவிடாமல் 'மங்காத்தா', 'கலகலப்பு' போன்ற கம்ர்ஷியல் படங்களிலும் நாயகியாக நடித்தார். அந்தப் படங்களில் நடனம், கிளாமர் போன்ற கமர்ஷியல் பட கதாநாயகிகளிடம் எதிர்பார்க்கப்படும் விஷயங்களையும் தன்னால் சிறப்பாகத் தரமுடியும் என்று காட்டினார். 2011இல் வெளியான 'எங்கேயும் எப்போதும்' படத்தில் காதலன் மீது ஆளுமை செலுத்தும் தன்னம்பிக்கையும் பொதுநல நோக்கும் நிறைந்த இளம் பெண்ணாக மிக அருமையாக நடித்திருந்தார்.

தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தெலுங்கில் அவருடைய முதல் படமான 'சீதாம்மா வகிட்லோ சிரிமல்லே செட்டு' படத்திலேயே நந்தி விருதைப் பெற்றார். விருது பெற்ற நடிகையாக இருந்தாலும் 'சிங்கம் 2' உள்ளிட்ட ஒரு சில படங்களில் ஒரே ஒரு பாடலில் தோன்றி நடனமாடினார். சினிமாவில் எதையும் உயர்வு தாழ்வாகப் பார்க்காத மனநிலையை வெளிப்படுத்தினார்.

தனிப்பட்ட வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் சில ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்தவர் சுராஜ் இயக்கிய 'சகலகலா வல்லவன்' படத்தின் மூலம் மறுவருகை புரிந்தார். கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி', ராமின் 'பேரன்பு' ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்து மீண்டும் நடிப்பில் தனது எல்லைகளை விரிவுபடுத்தினார். 'மாப்ள சிங்கம்', 'பலூன்', 'சிந்துபாத்' போன்ற கமர்ஷியல் படங்களிலும் தொடர்ந்து நடித்துவருகிறார்.

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராவிட்டாலும் பெரும்பாலான படங்களில் சொந்தக் குரலில் பிழையின்றித் தமிழ் பேசி அசத்துகிறார். முன்பைவிட இப்போது இன்னும் இளமையாகத் தோன்றுகிறார். உடல் எடையைப் பேரளவு குறைத்திருக்கிறார். விருதுகளை வாங்கும் திறமை வாய்ந்த நடிகையாக இருப்பதோடு முன்னணி நட்சத்திர கதாநாயகியாகவும் உயர்வதற்குத் தேவையான தகுதிகளைத் தொடர்ந்து வளர்த்துக்கொண்டே இருக்கிறார்.

திறமையும் உழைப்பும் சாதிக்கும் உந்துதலையும் எப்போதும் வெளிப்படுத்திவரும் அஞ்சலி அவருடைய இலக்குகள் அனைத்திலும் வெற்றிபெற்று திரைத் துறையில் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தி தேசிய விருது உள்ளிட்ட தேசிய அங்கீகாரங்களையும் பெறுவார் என்று உறுதியாக நம்பலாம். அது விரைவில் நிறைவேற இந்தப் பிறந்த நாளில் அஞ்சலியை மனதார வாழ்த்துவோம்.

SCROLL FOR NEXT