தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் பிறந்த நாள் ஸ்பெஷல்: திரை இசைப் பாரம்பரியத்தின் இளம் சாதனையாளர்

எஸ்.கோபாலகிருஷ்ணன்

தமிழ் சினிமாவுக்கென்று ஒரு நெடிய இசைப் பாரம்பரியம் உண்டு. தமிழ் சினிமா இசையமைப்பாளர்களில் பலர் மாபெரும் சாதனைகளைப் படைத்துள்ளனர். காலத்தால் அழிக்க முடியாத காவிய இசையை அளித்துள்ளனர். அந்த பாரம்பரியத்தில் முக்கிய இடத்தில் வைக்கத்தக்கவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஒரு இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நாயக நடிகராகவும் சாதித்துவருபவர். அவருக்கு இன்று (ஜூன் 13) பிறந்த நாள்.

சவாலை வென்ற முதல் படம்

ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி மகனான ஜி.வி.பிரகாஷ் சின்னஞ்சிறு பாலகனாக இருந்தபோது ரஹ்மான் இசையில் ‘ஜென்டில்மேன்’ படத்தில் இடம்பெற்ற ‘சிக்கு புக்கு ரயிலே’ பாடலின் மூலம் திரைத் துறைக்குப் பாடகராக அறிமுகமானார். அதன் பிறகு 90-களில் ரஹ்மான் இசையில் பல பாடல்களில் சிறுவர்களுக்குப் பாடினார். ’ஜென்டில்மேன்’ படத்தின் இயக்குநராக அறிமுகமாகி இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக உயர்ந்துவிட்ட ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் வசந்தபாலன். அவர் இயக்கிய படம் ‘வெயில்’.

விருதுநகரின் வெப்பமும் கசகசப்பும் அதையும் தாண்டி வெள்ளந்தி மனிதர்களின் அன்பின் நீரூற்றையும் கண்முன் நிறுத்திய ‘வெயில்’ படத்தில் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி,வி.பிரகாஷ், முதல் படத்திலேயே ‘வெயிலோடு விளையாடி’, ‘உருகுதே மருகுதே’, ‘காதல் நெருப்பின் பயணம்’ என வெவ்வேறு வகைமைகளைச் சேர்ந்த சிறந்த பாடல்களைக் கொடுத்து அழுத்தமான தடம் பதித்தார். பின்னணி இசைக்காகவும் கவனிக்க வைத்தார்.

வெற்றிக் கூட்டணிகள்

அடுத்த ஆண்டு வெளியான ‘கிரீடம்’, ‘பொல்லாதவன்’ படங்களில் சிறந்த பாடல்களை வழங்கினார் ஜி.வி. ‘கிரீடம்’ படத்தில் ‘அக்கம் பக்கம்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. ‘பொல்லாதவன்’ படத்திலும் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. எம்.எஸ்.விஸ்வநாதன் ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துக்கு உருவாக்கிய ‘எங்கேயும் எப்போதும்’ பாடலை ’பொல்லாதவன்’ படத்தில் ரீமிக்ஸ் செய்து அசல் பாடலைப் பாடிய எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையே ரீமிக்ஸையும் பாடவைத்தார். துடிப்புமிக இசையைக் கொண்ட இந்தப் பாடல் இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது.

இந்தப் படங்களின் மூலம் அறிமுகமான இயக்குநர்கள் விஜய், வெற்றிமாறன் ஆகியோருடன் வெற்றிகரமான இசைக் கூட்டணி அமைத்தார். விஜய்யுடன் ‘மதராசபட்டினம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘சைவம்’ படங்களிலும் வெற்றிமாறனின் ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘அசுரன்’ படங்களிலும் வெற்றிப் பாடல்களையும் சிறந்த பின்னணி இசையையும் அளித்தார். செல்வராகவனுடன் அவர் பணியாற்றிய ‘ஆயிரத்தில் ஒருவன்’,’மயக்கம் என்ன’ படங்களிலும் சிறந்த பாடல்கள் அமைந்தன.

குறிப்பாக ‘மயக்கம் என்ன’ படத்தில் ‘பிறைதேடும் நிலவிலே’ என்னும் பாடல் எப்போது கேட்டாலும் மனதை உருக்கும் மெலடியாக நிலைபெற்றது. 2010-க்குப் பிறகு வந்த இயக்குநர்களில் அட்லியுடன் அவருடைய கூட்டணி வெற்றிகரமாக அமைந்தது. ‘ராஜா ராணி’ படத்தில் அனைத்துப் பாடல்களும் வெற்றிபெற்றன. விஜய் நடித்த ‘தெறி’ படத்திலும் இசை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் தளபதி ரசிகர்களுக்கு தலைவாழை இலையில் விருந்து படைத்தார்.

இது தவிர ஒரு முறை மட்டுமே பணியாற்றிய இயக்குநர்கள் மற்றும் அறிமுக இயக்குநர்களின் படங்களுக்கும் சிறந்த வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். ‘வெள்ளித்திரை’, ‘ஆனந்த தாண்டவம்’, ‘ஈட்டி’, ‘கொம்பன்’, ‘காக்கா முட்டை’ என அந்தப் பட்டியலும் நீளமானது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடப் படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார்.

பின்னணி இசையாலும் அசத்துபவர்

மெலடிகள், மேற்கத்திய இசை வடிவங்களை உள்ளடக்கிய பாடல்கள், கர்நாடக ராகங்களை அடிப்படையாகக் கொண்ட பாடல்கள், குத்தாட்டம் போடவைக்கும் பாடல்கள் என அனைத்து வகைமைகளிலும் சிறப்பான பாடல்களைக் கொடுத்துள்ளார் ஜி.வி. ஒரு இசையமைப்பாளராக அவரை ஒரே வகைமைக்குள் அடைத்துவிட முடியாது. அதே போல் பாடல்களுக்கு இணையாகப் பின்னணி இசைக்காகவும் அதிகம் புகழப்படும் இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார் ஜி.வி.பிரகாஷ், தொடர்ந்து சிறந்த பின்னணி இசைக்காகவும் பாராட்டப்படுவது அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் நடந்துவிடுவதில்லை. ஜி.விக்கு அது நடக்கிறதென்றால் பின்னணி இசைக்கு அவர் எவ்வளவு மெனக்கெடுகிறார் என்பதைப் புரிந்துகொள்ளலாம். கடந்த ஆண்டு வெளியான ‘அசுரன்’ படத்தில் அவருடைய பின்னணி இசை அனைவரையும் பிரமிக்க வைத்தது என்றால் மிகையில்லை.

கலைஞர்களையும் கவர்ந்த பாடகர்

இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, யுவன் ஷங்கர் ராஜா என பாடகராகவும் முத்திரை பதித்த இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். தான் இசையமைத்த பாடல்களை மட்டுமல்லாமல் மற்றவர்கள் இசையமைத்த பாடல்களையும் சிறப்பாகப் பாடி மறக்க முடியா இசை அனுபவங்களைக் கொடுத்திருக்கிறார். அவருடைய இசையில் பாடியவற்றில் ‘ஆடுகளம்’ படத்தில் ‘யாத்தே யாத்தே’ (ஆடுகளம்), ’யாரிந்த சாலையோரம்’ (தலைவா), என பல பாடல்கள் இன்பத்தேனாக காதில் பாய்பவை. மற்றவர் இசையில் பாடியவற்றில் ‘கோனக் கொண்டக்காரி’ (மதயானைக்கூட்டம்), ‘றெக்கைமுளைத்தே’ (சுந்தரபாண்டியன்), ‘மெர்சல் அரசன்’ (மெர்சல்) ஆகியவை மிகப் பெரிய வெற்றிபெற்றன.

மதிப்பு உயரும் நாயக நடிகர்

2015-ல் வெளியான ‘டார்லிங்’ திரைப்படத்தில் நாயகனாக நடித்தார் ஜி.வி.பிரகாஷ். அந்தப் படம் வணிகரீதியாக வெற்றி பெற்றதோடு ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்றது. அதைத் தொடர்ந்து நடிப்பிலும் தீவிர கவனம் செலுத்தினார். படிப்படியாக முன்னேறி இன்று அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் நாயக நடிகராக முன்னேறியிருக்கிறார். தொடக்கத்தில் விடலைத்தனமான படங்களில் மட்டுமே நடிக்கிறார் என்ற விமர்சனம் எழுந்தது. பாலாவின் ‘நாச்சியார்’ படத்தில் கள்ளங்கபடமற்ற அப்பாவி இளைஞனாகவும் ராஜீவ் மேனனின் ‘சர்வம் தாள மயம்’ படத்தில் அபார இசைத்திறமை கொண்ட தலித் இளைஞனாகவும் நடித்ததன் மூலம் அந்த விமர்சனங்களைக் களைந்தார்.

இயக்குநர் சசியின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்திலும் முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருந்தார். வசந்தபாலன் இயக்கும் ‘ஜெயில்’ உட்பட அடுத்தடுத்து அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படங்கள் நடிகராக அவர் மீதான மரியாதையை மேலும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

நடிப்பில் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கிய பிறகு தான் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இசையமைப்பேன் என்று சொல்லாமல் மற்ற படங்களுக்கும் இசையமைத்துவருகிறார். முன்னணி இயக்குநர்கள். நடிகர்களின் படங்களுக்குத் தொடர்ந்து இசையமைத்துவருகிறார். கடந்த ஆண்டு வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியுடன் ‘அசுரன்’ படத்தில் அசத்திய பிறகு இந்த ஆண்டு சுதா கொங்கரா- சூர்யா கூட்டணியில் வெளியாகவிருக்கும் ‘சூரரைப் போற்று’ படத்திலும் இசை ஜாலம் நிகழ்த்தியிருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்

இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக தீவிரமாக இயங்கிக்கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் சமூகப் பொறுப்புள்ள கலைஞனாகவும் இருக்கிறார். ஜல்லிக்கட்டு தடை, நீட் தேர்வு, நெடுவாசல், ஸ்டெர்லைட் என தமிழர்களுக்கு எதிரானதாகப் பார்க்கப்படும் பிரச்சினைகள் அனைத்துக்கும் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதோடு களத்திலும் நிற்கிறார். போராட்டங்களில் கலந்துகொள்கிறார். பொதுவாழ்வுக்கு வரும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்கிறார்.

இந்தப் பிறந்த நாளில் திரைத் துறையில் பல சாதனைகள் புரிய ஜி.வி.பிரகாஷை மனதார வாழ்த்துவோம்.

SCROLL FOR NEXT