ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 'எந்திரன் 2' படத்தின் பூஜையை ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
'கபாலி' படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன் 2' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருக்கிறார் ரஜினி. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்தின் வில்லனாக விக்ரம் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால், படக்குழு அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், படப்பிடிப்புக்கு முன்பு 'எந்திரன் 2' படத்தின் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு பணிபுரிய இருக்கும் ஸ்ரீனிவாஸ் மோகனை அழைத்து பேசியிருக்கிறார் இயக்குநர் ஷங்கர். படத்தின் காட்சிகள் எப்படி அமைய இருக்கின்றன, தன்னுடைய எண்ணம் என்ன உள்ளிட்ட அனைத்தையும் ஸ்ரீனிவாஸ் மோகனிடம் தெளிவுப்படுத்தி இருக்கிறார். கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து இருவரும் ஒரு வாரம் கலந்து ஆலோசித்திருக்கிறார்கள். மேலும், படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்ற இருக்கும் நீரவ் ஷாவிடமும் பேசியிருக்கிறார் ஷங்கர்.
'கபாலி' படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் முடிந்துவிடும். அதற்குப் பிறகு ரஜினி சில நாட்கள் ஒய்வெடுக்க இருக்கிறார். அதனைத் தொடர்ந்தே 'எந்திரன் 2' பணிகளில் தீவிரம் காட்ட இருக்கிறார்.
ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி 'எந்திரன் 2' படத்துக்கான பூஜையை பிரம்மாண்டமாக நடத்த தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இதற்காக ரஜினியிடம் அனுமதி கோரியிருக்கிறார்கள்.
ரஜினியுடன் நடிக்கவிருக்கும் நாயகி மற்றும் வில்லன் உள்ளிட்ட கதாபாத்திரங்களுக்காக பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் ஷங்கர். விரைவில் இறுதி செய்யப்படும் என்கிறது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வரும் தகவல்.