குறைந்தபட்ச கருவிகள் கொண்டு இயற்கை வெளிச்சத்தில் 'ஒரு சான்ஸ் குடு' பாடலை படமாக்கியதாக கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, வீட்டிலிருந்தபடியே 'கார்த்திக் டயல் செய்த எண்' என்ற குறும்படத்தை இயக்கி வெளியிட்டார் இயக்குநர் கெளதம் மேனன். அந்தப் படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா' 2-ம் பாகத்துக்கான கதையிலிருந்து ஒரு காட்சியை மட்டும் குறும்படமாக இயக்கியிருந்தார். இதில் சிம்பு மற்றும் த்ரிஷா இருவரும் நடித்திருந்தனர்.
தற்போது 'ஒரு சான்ஸ் குடு' என்ற பாடலை இயக்கியுள்ளார் கெளதம் மேனன். இதையும் கரோனா காலத்திலேயே இயக்கியுள்ளார். இதில் சாந்தனு, மேகா ஆகாஷ் மற்றும் கலையரசன் நடித்துள்ளனர். கார்த்திக் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு நடன அசைவுகளை சதீஷும், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர்.
'ஒரு சான்ஸ் குடு' பாடலை படம்பிடித்த அனுபவம் குறித்து பேசியுள்ள கெளதம் மேனன் சிறிய அணிகளோடு வேலையை முடிக்க முடிகிறதா என்று பார்ப்பதற்கான முயற்சியே இது என்று குறிப்பிட்டுள்ளார். "ஒரு படப்பிடிப்புத் தளத்தில் குறைந்தது 60-70 நபர்கள் வேண்டும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் 10 நபர்களை வைத்து படப்பிடிப்பு நடத்த முடியுமா என்பதற்கான முயற்சி தான் 'ஒரு சான்ஸ் குடு' பாடல். குறைந்தபட்ச கருவிகளை வைத்து ஒத்திகை பார்த்தோம். இயற்கை வெளிச்சத்தை வைத்துப் படம் பிடித்தோம்.
எதிர்காலத்தில் சிறிய அளவு குழுக்களை வைத்துதான் படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் நிர்ப்பந்தித்தால் கூட அது சாத்தியமற்றது. ஏனென்றால் ஒப்பனை, உணவு, தண்ணீர் என படத் தயாரிப்பில் ஒவ்வொரு வேலைக்கும் ஆட்கள் தேவை. 'ஒரு சான்ஸ் குடு' பாடலில் மேகா ஆகாஷ் ஒப்பனை இல்லாமல் நடித்தார். ஆனால் சில ஒளி அமைப்புக்கு கண்டிப்பாக ஒப்பனை இல்லாமல் படம்பிடிக்க முடியாது.
நான் இன்னும் பல தனிப் பாடல் வீடியோக்களை உருவாக்கும் நோக்கத்தில் இருக்கிறேன். என் அடுத்த படைப்பு 'அவளே'. அதன் படப்பிடிப்பு வரும் வாரத்தில் நடைபெறும். இது தூரத்திலிருந்து காதலிக்கும் ஒரு இசைக் கலைஞன், நடனக் கலைஞரைப் பற்றிய ஒரு கதை. 90 நாட்கள் பிரிந்திருக்கும் அவர்கள் அதன் பின் சந்திக்கிறார்கள். தற்போதைய சூழலுக்குச் சரியாக இருக்கும். இதன் பிறகு இன்னொரு பாடல் வீடியோவில் நடன இயக்குநர் சதீஷ் நடிக்கவிருக்கிறார்" என்று கெளதம் மேனன் கூறியுள்ளார்.