தமிழ் சினிமா

கரோனா அச்சுறுத்தலிலிருந்து சென்னையை மாற்றும் ஒரு முயற்சியே 'நாமே தீர்வு': கமல்

செய்திப்பிரிவு

கரோனா அச்சுறுத்தலிலிருந்து சென்னையை மாற்றும் ஒரு முயற்சியே 'நாமே தீர்வு' என்று கமல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா அச்சுறுத்தல் என்பது மிக அதிகமாக இருக்கிறது.

இதனிடையே இன்று (ஜூன் 5) உலக சுற்றுச் சூழல் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் 'நாமே தீர்வு' என்ற தன்னார்வலர்கள் திட்டத்தைத் தொடங்கியுள்ளார் கமல். இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டு விட்டு, ஜூம் செயலி மூலம் பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

அப்போது, "கரோனா விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் எதில் சறுக்கியதாகக் கருதுகிறீர்கள்?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கமல் கூறியதாவது:

"சரித்திரத்தைப் பார்க்கும் போது அனைத்து அரசுகளும் செய்த தவற்றைத் தான் இந்த அரசுகளும் செய்திருக்கின்றன. காரணம் சாவின் எண்ணிக்கையை அடக்கி வாசிப்பது அல்லது குறைத்துச் சொல்வது என்பது அனைத்து நாட்டு அரசுகளும் செய்தவை தான். சரித்திரத்தைப் பார்த்து கற்றுக் கொள்ளவில்லை என்பதற்கான ஒரு உதாரணம் இது. அந்தளவில் சறுக்கியிருக்கிறோம்.

இப்போது எல்லாம் அதைப் பேசி அர்த்தமில்லை. அந்த எல்லையை எல்லாம் கடந்து விட்டோம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், சென்னையைப் பொறுத்தவரை ரெட் சோனாகவே இருக்கிறது. அரசு சொல்வதை ஏற்றுக் கொண்டால் கூட, சென்னை இன்னும் விடுபடவில்லை என்பது தான் அவர்களே ஒப்புக் கொள்ளும் உண்மை. ரெட் சோனிலிருந்து பச்சையாக மாற்றுவதற்கான ஒரு முயற்சி தான் 'நாமே தீர்வு'.

இது வெல்ல வைக்க வேண்டியது தன்னார்வலர்களின் எண்ணிக்கையையும், ஆர்வத்தையும் பொறுத்தது. அதை ஜாக்கிரதையாக செய்ய வேண்டும். மக்கள் திரளாக ஒன்றுகூடி தங்களின் எண்ணத்தையும், எதை நம்புகிறோம் என்பதையும் அரசுக்கு வலியுறுத்த வேண்டும். அது கோட்டைக்கு பெரிய ஊர்வலமாக போவதை விட, முக்கியமான சேவையாக இதை நான் நினைக்கிறேன். ஏனென்றால் மக்களுக்கு இது நேரடியாக சென்றடையும். அடையாளப் போராட்டமாக மாறாமல், ஒரு அர்த்தமுள்ள இயக்கமாக இருக்க வேண்டும் என்று நினைப்பதினால் தான் இதைத் தொடங்கியுள்ளேன்"

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT