முன்னாள் இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத், நகைச்சுவை நடிகர் கவுண்டமணியைச் சந்தித்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முக்கியமான நகைச்சுவை நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். ஆனால் கடந்த சில வருடங்களாக அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை. கடைசியாக 2016-ம் ஆண்டு 'வாய்மை' என்கிற படத்தில் நடித்திருந்தார்.
இன்றும் சமூக ஊடகங்களில் தமிழ்ப் பயனர்கள் பகிரும் மீம்களில் கவுண்டமணி இடம்பெற்று வருகிறார். அவரது பல்வேறு வசனங்களைப் பின்னூட்டங்களில், கருத்துப் பதிவுகளில் பார்க்க முடியும். ஊடகங்களிலும் பேட்டி, நிகழ்ச்சி என கவுண்டமணியைப் பார்க்க முடியாது என்பதால் அவரை எந்த ரசிகர் சந்தித்தாலும் அது சமூக வலைதளத்தில் பரபரப்பாகப் பேசப்படும். பல்வேறு துறைகளின் நட்சத்திரங்களே கவுண்டமணியின் ரசிகர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதையும் பார்க்க முடியும்.
அப்படி சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கவுண்டமணியைச் சந்தித்துள்ளார். பல் மருத்துவரைப் பார்க்கச் சென்றபோது எதேச்சையாக அவர் கவுண்டமணியை அங்கு சந்தித்து அவரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.
"பல் மருத்துவருடனான சந்திப்பு நினைத்ததை விட சிறப்பாக அமைந்தபோது. நகைச்சுவை நடிகர் கவுண்டமணியைச் சந்தித்தேன். 'அரசியல்ல இதெல்லாம சாதாரணமப்பா' " என்று தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தோடு பகிர்ந்துள்ளார் பத்ரிநாத். அவரது இந்தப் பதிவு வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமும் பத்ரிநாத்தின் இந்தப் பதிவுக்கு, கவுண்டமணியின் 'சூரியன்' படக் காட்சி ஒன்றைக் குறிப்பிட்டுப் பதிலளித்துள்ளது. 2018-ம் ஆண்டு, பத்ரிநாத் அனைத்துவிதமான கிரிக்கெட் ஆட்டங்களிலிருந்தும் ஒய்வு பெற்றது நினைவுகூரத்தக்கது.