மத நம்பிக்கையைக் காயப்படுத்தும் எண்ணமில்லை எனவும், 'காட்மேன்' தொடர் வெளியீட்டை நிறுத்தி வைப்பதாகவும் ஜீ குழுமம் அறிவித்துள்ளது.
‘காட்மேன்’ என்ற பெயரில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில், இளங்கோ தயாரிப்பில் இணைய தள தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் 12-ம் தேதி பிரபல நிறுவனம் மூலம் ஆன்லைனில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரின் டிரெய்லர் அண்மையில் வெளியிடப்பட்டது. அதில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள், வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த தொடரைத் தடை செய்ய வேண்டும், இயக்குநர், தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் அண்மையில் புகார் அளித்தனர்.
மேலும், பல்வேறு தரப்பினரும் இந்த தொடருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்துகளைப் பதிவு செய்தனர். இறுதியில் இந்தத் தொடரை வெளியிடப் போவதில்லை என்று ஜீ நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"டிஜிட்டல் களத்தில் பொறுப்புள்ள முன்னணி தளமாக ஜீ குழுமம் செயல்படுகிறது. உள்ளடக்கங்களின் சுய தணிக்கைகளில் கடுமையான வழிகாட்டு முறைகளை இந்த தளம் பின்பற்றி வருகிறது. இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாகப் பல அம்சங்களைக் கண்டிப்பாகச் செயல்படுத்தி வருகிறது. முற்றிலுமாக தன் பார்வையாளர்களின் நலனுக்காக, ஆன்லைன் உள்ளடக்கங்களின் சுய தணிக்கை சட்டத்தில் முதலில் கையெழுத்திட்டவர்களில் ஜீ குழுமமும் ஒன்று.
எங்கள் சமீபத்திய தமிழ் தொடராக 'காட்மேன்' தொடர்பாக வந்த கருத்துகள் அடிப்படையில் அந்த தொடரின் வெளியீட்டை இந்த தருணத்தில் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். இந்த தொடருக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ, ஜீ குழுமத்துக்கோ எந்த ஒரு மதத்தின் நம்பிக்கையையோ, சமூகத்தையே, தனி நபரின் நம்பிக்கையையோ காயப்படுத்தும் எண்ணமில்லை. தன் பார்வையாளர்களின் பொழுதுபோக்குக்காகப் பல மொழிகளில் சமூகத்தின் சிறப்பான அம்சங்களைப் பிரதிபலிக்கும் 100க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை ஜீ குழுமம் வழங்கி வருகிறது"
இவ்வாறு ஜீ நிறுவனம் தெரிவித்துள்ளது