மணிரத்னம் வார்த்தைகளால் தடைகளைக் கடந்தேன் என்று இயக்குநர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் நடிப்பில் வெளியான படம் 'துருவங்கள் பதினாறு'. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை முதலில் வெளியிட யாருமே முன்வரவில்லை. பலகட்டப் போராட்டங்களுக்குப் பிறகே வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்துக்குப் பிறகு 'நரகாசூரன்' மற்றும் 'மாஃபியா' ஆகிய படங்களை இயக்கியுள்ளார் கார்த்திக் நரேன். இதில் 'நரகாசூரன்' படம் மட்டும் இன்னும் வெளியாகவில்லை. தற்போது தனுஷை இயக்கவுள்ள படத்துக்காக தயாராகி வருகிறார் கார்த்திக் நரேன்.
இதனிடையே, இயக்குநர் மணிரத்னத்துக்கு விடுத்துள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் கார்த்திக் நரேன் கூறியிருப்பதாவது:
"'துருவங்கள் பதினாறு' படத்தை யாரும் வாங்கவில்லை. அதன் ஆன்லைன் ரிலீசுக்கு முன்னால் படத்தின் ட்ரெய்லரை மணி சாரிடம் காட்டினேன். சுவாரஸ்யமாக இருக்கிறது படத்தைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறேன். வாழ்த்துக்கள் என்றார். அந்த வார்த்தைகள் தான் அனைத்து தடைகளையும் கடக்க உதவியது. பிறந்தநாள் வாழ்த்துகள் சார்"
இவ்வாறு கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.