திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையைப் படைக்க இருக்கின்ற ஒரு மனிதன் மணிரத்னம் என்று பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் இன்று (ஜூன் 2) தனது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு இயக்குநர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருமே மணிரத்னத்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
மணிரத்னம் பிறந்த நாளை முன்னிட்டு, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில் கூறியிருப்பதாவது:
"பெருமையாக பேசணும் என்றால் அது மணிரத்னம் தான். சினிமாவில் உலகின் மகத்தான கலைஞனை தமிழகம் ஈன்று எடுத்ததிற்காக தமிழுக்கும் பெருமை, தமிழ் மண்ணுக்கும் பெருமை. அந்தக் கலைஞன் இன்னும் உலகளவில் தன்னுடைய திறமையைக் காட்டி, இந்தத் திரைத்துறையில் மிகப்பெரிய சாதனையைப் படைக்க இருக்கின்ற ஒரு மனிதன்.
அவருடைய பிறந்த நாளில் உலகத் தமிழர்கள் அனைவரும் அவருக்கு வாழ்த்து கூறவேண்டும். என் இதயப்பூர்வமான வாழ்த்துகளைக் கூறுகிறேன். தமிழுக்கும், தமிழ் கலைகளுக்கும், திரையுலகிற்கும், அவன் தனிமுத்திரை பதிக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்"
இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தற்போது பலராலும் படமாக்க நினைத்துக் கைவிட்ட 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கி வருகிறார் மணிரத்னம். இதில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.