தமிழ் சினிமா

டிஜிட்டல் வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் டைட்டானிக்

செய்திப்பிரிவு

'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' படத்தை டிஜிட்டலில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணிகளுமே நடைபெறாமல் இருந்தது. தற்போது இறுதிக்கட்டப் பணிகளும், சின்னத்திரை படப்பிடிப்புக்கும் மட்டும் அனுமதியளித்துள்ளது தமிழக அரசு. சின்னத்திரை படப்பிடிப்பைப் போலவே வெள்ளித்திரை படப்பிடிப்புக்கும் அனுமதி கோரியுள்ளனர் முன்னணி தயாரிப்பாளர்கள்.

இதனிடையே திரையரங்குகளும் எப்போது திறக்கும் என்பது தெரியாமல் உள்ளது. அப்படி திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், பழைய மாதிரி மக்கள் வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் படங்களின் தயாரிப்பாளர்கள், டிஜிட்டல் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறார்கள்.

தமிழில் முதல் படமாக ஜோதிகா நடித்த 'பொன்மகள் வந்தாள்' வெளியானது. அதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'பெண்குயின்' படமும் வெளியாகவுள்ளது. இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து பல்வேறு படங்கள் டிஜிட்டல் வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதில் சி.வி.குமார் தயாரிப்பில் ஜானகிராமன் இயக்கியுள்ள 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்' படமும் அடங்கும். கலையரசன், ஆனந்தி, ராகவ் விஜய், ஆஷ்னா ஜாவேரி, காளி வெங்கட், மதுமிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ள இந்தப் படம் டிஜிட்டல் வெளியீட்டுப் பேச்சுவார்த்தை முடிந்து, இம்மாத இறுதிக்குள் வெளியாகிவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்தார்கள்.

SCROLL FOR NEXT