தமிழ் சினிமா

சரஸ்வதியின் புதல்வன் இளையராஜா: பாரதிராஜா புகழாரம்

செய்திப்பிரிவு

சரஸ்வதியின் புதல்வன் இளையராஜா என்று இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜாவுக்கு இன்று (மே 2) பிறந்த நாள். இதனால் சமூக வலைதளத்தில் பலரும் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இளையராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு, இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள வாழ்த்தில் கூறியிருப்பதாவது:

"இன்று தமிழர்கள் மட்டுமல்ல உலக தமிழர்கள் எல்லாம் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நாள். ஏனென்றால் தமிழுக்கும், தமிழ் இசைக்கும் பெருமை சேர்த்த என் நண்பன், என் சகோதரன் அதை விட மேலான சரஸ்வதியின் புதல்வன் இளையராஜாவின் பிறந்த நாள். இந்த நாள் பெருமைப்பட வேண்டிய நாள். பொதுவாக இசைக் கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கலாம்.

நான் எப்போதுமே இளையராஜாவிடம் "ஐந்து விரல்களிலும் சரஸ்வதி உட்கார்ந்திருக்கிறாள்" என்று சொல்வேன். அந்த விரல்கள் இன்றளவும் ஆர்மோனியத்தில் கை வைக்கும் போது, உலகத்தில் இல்லாத சப்தங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கும். அதைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். நண்பன், சகோதரன் என்பதை எல்லாம் தாண்டி ஒரு கலைஞனாக விஸ்வரூபம் எடுத்து நிற்பான். அதைப் பார்த்துப் பிரமிப்பேன்.

இன்றளவும் நிறைய இசைக் கலைஞர்களைப் பார்த்திருக்கிறேன். என் படமும் இளையராஜாவின் இசையும் கணவன் - மனைவி மாதிரி இருக்கும். என் படத்தை தனியாக எடுத்துவிட்டு, இசையைக் கேட்டால் என் படம் தெரியும். அந்த இசையை எடுத்துவிட்டு, என் படத்தைப் போட்டால் அவனுடைய இசைத் தெரியும். அந்தளவுக்குப் பெருமைக்குரிய என் நண்பன் இளையராஜாவின் பிறந்த நாள். இன்று போல் அல்ல, இதற்கு மேலும் சிறப்பான விருதுகள், மரியாதை பெற்று இந்த தமிழுக்கும், தமிழ் இசைக்கும் தொண்டாற்ற அவனை வாழ்த்துகிறேன்"

இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT