தேசிய அளவில் புகழ்பெற்று தமிழர்கள் மீதான மரியாதையை அதிகரிக்கச் செய்த திரைத்துறை ஆளுமைகளில் முக்கியமானவர் இயக்குநர் மணிரத்னம். தமிழ்ச் சமூகத்தின் பெருமித அடையாளங்களில் ஒன்றாக விளங்குவதோடு இன்றும் தொடர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் படைப்பாளிக்கு இன்று (ஜூன் 2) பிறந்த நாள்.
எழுத்தைத் தாண்டிய இயக்கம்
1980-களின் தொடக்கத்தில் பாலச்சந்தர், பாரதிராஜா, மகேந்திரன் என திறமையும் தனித்தன்மையும் வாய்ந்த இயக்குநர்கள் தாங்களே வகுத்துக்கொண்ட ராஜபாட்டையில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த மாபெரும் படைப்பாளிகளின் வரிசையில் இணைந்தவர் மணிரத்னம். தன் திறமைகளாலும் தனித்தன்மைகளாலும் தமிழ் சினிமாவின் அரிய படைப்பாளிகளில் ஒருவராக உயர்ந்தவர். இதோடு திரைப்படமாக்கம் என்னும் கலையில் மணிரத்னத்தின் தொடக்க காலப் படங்கள்கூட ஒட்டுமொத்த தமிழ் சினிமாவுக்கே புதிய வாயில்களைத் திறந்தன. உருவாக்கத்தின் தரம் என்பதன் எல்லைகள் பேரளவு விரிவடைந்தன.
இயக்குநர் என்பவரின் வேலை கதை, திரைக்கதை எழுதி நடிகர்கள். தொழில்நுட்பக் கலைஞர்களிடம் சிறப்பான விஷயங்களை வெளியே கொண்டுவருதல் என்பது மட்டுமல்ல. ஒரு காட்சியில் ஒளி, நடிகர்கள் அணிந்திருக்கும் உடைகளின் நிறம், பின்னணியில் இருக்கும் பொருட்கள் என ஒவ்வ்வொரு ஃப்ரேமிலும் இயக்குநருக்கும் அவருடைய ரசனைக்கும் பங்கு இருக்கிறது என்பதை தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் விமர்சகர்களே கூட மணிரத்னத்தின் திரைப்படங்கள் மூலமாகவே புரிந்துகொள்ளத் தொடங்கினர்.
மணிரத்னத்தின் வருகைக்கு முன் கோலோச்சிய இயக்குநர்களோ அவருடைய சமகால இயக்குநர்களோ ஒவ்வொரு ஃப்ரேமிலும் அக்கறை செலுத்தவில்லை, படமாக்கலில் முழுக்கவனம் செலுத்தவில்லை என்பதல்ல இதன் பொருள். புராணக் கதைகள் நிரம்பிய சினிமாவின் தொடக்க ஆண்டுகளில் சமூகக் கதைகளைப் பேசத் துணிந்த இயக்குநர்கள் முதல் ஸ்டூடியோக்களில் சுருங்கிய படப்படிப்பை அசலான கிராமங்களுக்கு எடுத்துச் சென்ற பாரதிராஜாவரை பல்வேறு படைப்பாளிகள் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றனர். இவர்கள் எல்லோருக்குமே தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு உள்ளது. அந்த வகையில் திரைப்பட உருவாக்கத்தில் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தியதும் கதை-திரைக்கதை-வசனம் ஆகியவற்றைத் தாண்டிய இயக்குநரின் பங்களிப்பை ரசிகர்களையும் விமர்சகர்களையும் உணர்ந்து உள்வாங்கி விவாதிக்கச் செய்ததும் தமிழ் சினிமாவின் பரிணாம வளர்ச்சிக்கு மணிரத்னத்தின் முக்கியமான பங்களிப்புகள்.
மாற்றங்களுக்கு முகம்கொடுப்பவர்
ஒரு இயக்குநராக இன்றைக்கும் இளம் இயக்குநர்களுக்குப் போட்டியாக களம் காண்கிறார். 'மெளன ராகம்', 'நாயகன்' காலங்களிலிருந்த அளவுக்கு இல்லை என்றாலும் இன்றும் அவருடைய படங்கள் வெளியாவது திரைப்படத்துறை மற்றும் ரசிகர்களைப் பொருத்தவரை சாதாரண நிகழ்வாக தட்டிக் கழித்துவிட முடியாது. இன்றும் அவருடைய திரைப்படம் குறித்த முதல் அறிவிப்பு முதல் அந்தப் படத்தை ஆவலுடன் எதிர்நோக்கும் ரசிகர் பட்டாளம் இன்றும் இருக்கிறது.
அவர்களில் 2K கிட்ஸ் எனப்படும் 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளைஞர்களும் அடக்கம் என்பது முக்கியமானது. தன் சமகால இயக்குநர்கள் மட்டுமல்லாமல் தனக்குப் பிறகு வந்த பல இயக்குநர்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு இன்றும் முன்னணியில் இருக்கிறார். காலமாற்றத்துக்கேற்ப தன்னைத் தகவமைத்துக்கொள்ளும் உயிரினங்களே நீடித்து வாழும் என்பது பரிணாமவியல் கோட்பாட்டின் அடிப்படை விதிகளில் ஒன்று. திரைத் திறையில் அதற்கும் வாழ்வும் எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் மணிரத்னம்.
1980-கள், 90-கள், புத்தாயிரத்தின் முதல் பத்தாண்டுகள், டிஜிட்டல் புரட்சி வெடித்த அடுத்த பத்தாண்டுகள் என ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் உள்ளடக்கம், உருவாக்கம், ஒட்டுமொத்த தன்மை என் அனைத்து வகைகளிலும் அவருடைய திரைப்படங்களில் கால மாற்றம் மற்றும் ரசனை மாற்றத்துக்கு முகம்கொடுக்கும் முனைப்பு தென்படும். எல்லாப் படங்களிலும் அந்த முயற்சி சரியாகக் கைகூடியிருப்பதாகச் சொல்லிவிட முடியாது. ஆனால் ஒரு படைப்பாளியாக தொடர்ந்து கலை குறித்த தன் பார்வையை, ஆதார நம்பிக்கைகளைப் பரிசீலித்துத் தேவைப்பட்டால் மாற்றிக்கொள்ளவும் காலத்துக்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் தயங்காமல் இருப்பதுதான் மணி ரத்னம் என்னும் திரைப் படைப்பாளியை இன்னும் முன் வரிசையில் அமர்த்தியிருக்கிறது.
இயக்குநர்களின் இயக்குநர்
மணிரத்னத்தின் தமிழ்ப் படங்கள் இந்திக்குச் சென்றிருக்கின்றன. நேரடி இந்திப் படங்களை எடுத்திருக்கிறார். அவை வெற்றிபெற்றதோ இல்லையோ அந்தப் படங்களைப் பார்த்த இளைய தலைமுறை இயக்குநர்கள் பலர் அந்தப் படங்களைப் பார்த்து அவரைத் தமது ஆதர்சமாகக் கருதுகிறார்கள். பாலிவுட்டிலேயே அப்படி என்றால் தமிழ் சினிமாவில் கேட்கவே வேண்டாம். கெளதம் மேனன் முதல் மிக இளம் இயக்குநரான கார்த்திக் நரேன் வரை பல இயக்குநர்கள் மணிரத்னம் என்ற பெயரைக் கேட்டாலே மரியாதையுடன் எழுந்து நிற்பவர்களாக இருக்கிறார்கள்.
நடிகர்கள் நாடும் இயக்குநர்
சினிமாவில் நடிகர் தேர்வு மிக முக்கியமான பங்காற்றுகிறது. சரியான நடிகரைத் தேர்ந்தெடுத்துவிட்டால் ஒரு நல்ல திரைப்படத்துக்கான பாதி வேலை முடிந்துவிட்டதாகக் கூறப்படுவதுண்டு. அந்த வகையில் நடிகர்கள் தேர்வில் மணிரத்னத்துக்கு நிகரே இல்லை. இந்தக் கதாபாத்திரத்துக்கு இவர்தான் சரியானவர் என்று தேர்ந்தெடுப்பதில் வல்லவர் அவர். அவர் இப்போது இயக்கிக்கொண்டிருக்கும் கனவுப் படைப்பான 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியத் தேவன், ஆழ்வார்க்கடியான் கதாபாத்திரங்களுக்கு நகைச்சுவை நடிப்புக்குப் பேர் போன கார்த்தியையும் ஜெயராமையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்.
இது தவிர ஒவ்வொரு படத்தின் அறிவிப்பின்போதும் நாம் எதிர்பாராத நடிகர்கள் அதில் சேர்க்கப்பட்டிருப்பார்கள். Surprise Casting என்று சொல்லப்படும் இந்த உத்தியின் மூலம் படத்துக்கான எதிர்பார்ப்பைக் கூட்டுவதோடு அந்த நடிகர்கள் தன் படங்களில் சிறப்பாகவும் அதுவரை அவரிடமிருந்து காணக்கிடைத்திராத சாயலோடும் வெளிப்படுவதை உறுதி செய்திருப்பார் மணிரத்னம்.
நடிகர்கள் பலர் மணிரத்னம் இயக்கிய ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்று விரும்புவது அதன் மூலம் அவர்களுக்குத் தேசிய அளவில் கவனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டுமல்ல. மணிரத்னம் படங்களில் அவர்கள் நடிக்கும் விதம் அவர்களுக்கே புதுமையாக இருக்கும். கலைஞர்களாக அவர்களின் புதிய பரிமாணங்கள் வெளிப்படும். ஒரு நடிகருக்கு மணிரத்னம் படத்தில் நடித்த அனுபவம் என்றென்றும் மகிழ்ச்சியுடன் அசைபோடத்தக்கதாக இருக்கும்.
வெகுஜன ரசனையை மதிப்பவர்
1990-களிலிருந்து மணிரத்னத்தின் பல படங்கள் தீவிரவாதம். மதக் கலவரம், வடகிழக்கு பிரிவினைவாதம், இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிட்ட தீவிர சமூக-அரசியல் பிரச்சினைகளைப் பேசத் தொடங்கின. ஆனால் இந்தப் பிரச்சினைகளின் தீவிரத்தன்மையையும் ஆழத்தையும் அவை தொடவில்லை என்ற விமர்சனம் நியாயமானதுதான். ஆனால் மணிரத்னம் என்றைக்குமே தன்னை சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பவராகவோ அரசியல், கருத்தியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த படைப்பாளியாகவோ தன்னை முன்வைத்துக் கொண்டதில்லை. அவருடைய ரசிகர்களும் விமர்சகர்களும் அவர் மீது அறிவுஜீவி ஒளிவட்டத்தையும் அரசியல் ரீதியான முக்கியத்துவத்தையும் சுமத்தினாலும் அவர் என்றுமே தன்னை வெகுஜன சினிமா இயக்குநராகவே அடையாளப்படுத்திவந்துள்ளார்.
அதைவிட பல அறிவுஜீவி விமர்சகர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இருக்கும் வெகுஜன சினிமா குறித்த தாழ்வான பார்வை என்றுமே அவரிடமிருந்து வெளிப்பட்டதில்லை. வெகுஜன சினிமாவுடன் அடையாளப்படுத்தப்படும் பாடல்கள், கனவுக் காட்சிகள், காதலுக்கு அளிக்கப்படும் அளவு கடந்த கற்பனாவாத முக்கியத்துவம் ஆகியவை குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டபோது வெகுஜன சினிமா தன்மைகளை விட்டுக்கொடுக்காமல்தான் பேசியிருக்கிறார். “காதலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது தமிழ் சினிமா” என்று கேட்டபோது “அது உண்மைதான். ஆனால் அதில் என்ன தவறு இருக்கிறது. காதல் அழகானதுதானே” என்று பதில் சொன்னார்.
பரவசப்படுத்தும் பாடல் உருவாக்கம்
இருபெரும் இசைமேதைகளான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரின் மிகச் சிறந்த பல பாடல்கள் மணிரத்னம் படங்களில்தான் இடம்பெற்றுள்ளன. அந்தப் பாடல்கள் காலத்தால் அழியாத்தன்மை பெற்றிருப்பதற்கு மணி ரத்னம் அவற்றைப் படமாக்கிய விதத்துக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. பட உருவாக்கம் மட்டுமல்ல. பாடல் உருவாக்கத்திலும் பல புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தியவர் மணிரத்னம். இத்தனைக்கும் ஒரு பாடலுக்குக்கூட வெளிநாடு சென்று படப்பிடிப்பு நிகழ்த்தியதில்லை. ஒளிப்பதிவு, பின்னணி, ஷாட்கள்,. நடன அசைவுகள், கதாபாத்திரங்களின் பாவனைகள் ஆகியவற்றின் மூலமாகவே பரவசத்தை ஏற்படுத்தும் வகையில் பல பாடல்களை உருவாக்கிவருகிறார் மணி ரத்னம்.
நனவாகிக்கொண்டிருக்கும் பெருங்கனவு
தற்போது தன் நீண்ட நால் கனவுப் படைப்பான 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஐந்து பாகங்கள் கொண்ட கல்கியின் இந்த நாவலைப் படமாக்க எம்ஜிஆர் தொடங்கி பலர் முயன்று பார்த்திருக்கிறார்கள். மணிரத்னமே பத்தாண்டுகளுக்கு முன்பு இந்த முயற்சியைக் கையிலெடுத்து பிறகு பல்வேறு காரணங்களுக்காகக் கைவிட்டார். இப்போது அந்த மாபெரும் வரலாற்றுப் புனைவுப் படத்தைத் தொடங்கி கிட்டத்தட்ட 40 சதவீத படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். இரண்டு பாகங்களாக உருவாகப் போகும் இந்தத் திரைப்படம் உள்ளடக்கம், உருவாக்கம். வணிக சாத்தியங்கள் என பலவகைகளில் இந்திய சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக அமையும் என்றும் புதிய பாய்ச்சல்களை நிகழ்த்தக்கூடும் என்றும் நம்பலாம்.
'பொன்னியின் செல்வன்' வெற்றிகரமாக முடிப்பதோடு அதற்குப் பிறகும் ஒரு இயக்குநராக பல புதிய சாதனைகளை மணிரத்னம் நிகழ்த்த வேண்டும். அதற்கான ஆயுளும் ஆரோக்கியமும் அவருக்கும் வாய்க்க வேண்டும் என்று இந்தப் பிறந்தநாளன்று மனதார வாழ்த்துவோம்.