சேனல்கள் ஏன் நேர்மறையான செய்திகளில் அதிக கவனம் செலுத்தக் கூடாது என்று நடிகை ரைசா வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் வெள்ளித்திரை, சின்னத்திரை படப்பிடிப்புகள் எதுவுமே தொடங்கவில்லை. இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டுமே தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், இன்னும் தொடங்கப்படவில்லை.
இதனிடையே கரோனா அச்சுறுத்தலால் தினமும் வெவ்வேறு விதமான செய்திகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. இது தொடர்பாக ரைசா வில்சன் தனது சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:
"இது கரோனா காலம். எனவே என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள நான் உலகளவில் அனைத்து செய்தி சேனல்களையும் பார்க்க ஆரம்பித்தேன். நான் பார்க்கும் பெரும்பாலான செய்திகள் மோசமானவை என்று உணர்ந்தேன். ஏன் நல்ல செய்திகளையும், கெட்ட செய்திகளையும் சரிசமமாகக் காட்டக் கூடாது.
செய்தி சேனல்கள் தான் மிகப்பெரிய தாக்கத்தை மக்களிடம் ஏற்படுத்துவது. அவர்களுக்கு வேண்டுமென்றால் அவர்களால் உலகத்தை மாற்ற முடியும். சேனல்கள் ஏன் நேர்மறையான செய்திகளில் அதிக கவனம் செலுத்தக் கூடாது? உலகம் அப்படித்தான் இருக்கிறது என்று நம்பி, அதில் உந்தப்பட்டு நாமும் நல்லது செய்வோம் இல்லையா?"
இவ்வாறு ரைசா வில்சன் தெரிவித்துள்ளார்.