தமிழ் சினிமா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்?

செய்திப்பிரிவு

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'கோப்ரா' மற்றும் 'பொன்னியின் செல்வன்' ஆகிய இரண்டு படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம். இதில் 'பொன்னியின் செல்வன்' பெரிய பட்ஜெட், நிறைய நடிகர்கள் உள்ள படம் என்பதால் எப்போது படப்பிடிப்பு முடியும் என்பதே தெரியாது. 'கோப்ரா' படத்துக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது.

இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் இயக்குநர் யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது இதில் கார்த்திக் சுப்புராஜ் முன்னணியில் இருப்பது உறுதியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை விக்ரமுக்கு ரொம்பவே பிடித்துவிட்டதால், பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

'கோப்ரா' படத்தைத் தயாரித்து வரும் லலித் குமார், கார்த்திக் சுப்புராஜ் - விக்ரம் படத்தையும் தயாரிக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. மேலும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துக்கொண்டே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்க விக்ரம் முடிவு செய்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ஆகையால், விக்ரம் படத்தின் முதற்கட்டப் பணிகளை கரோனா அச்சுறுத்தல் முடிந்தவுடன் கார்த்திக் சுப்புராஜ் தொடங்குவார் எனத் தெரிகிறது.

SCROLL FOR NEXT