14 வயதினிலே என்னை பெண்ணியவாதியாக்கிய அந்தச் சம்பவம் குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத் பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல வரவேற்பைப் பெற்ற படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். சமீபத்தில் அஜித்துடன் 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் தமிழ்த் திரையுலகில் அனைவரும் அறியக்கூடிய நாயகியாக மாறினார்.
அதனைத் தொடர்ந்து விஷாலுடன் 'சக்ரா' படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. கரோனா ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் வெளியிட, படக்குழு ஆயத்தமாகி வருகிறது.
இதனிடையே, மே 28-ம் தேதி 'மாதவிடாய் சுகாதார தினம்' கொண்டாடப்பட்டது. இது தொடர்பாக இணையத்தில் ஹேஷ்டேக்குகள் உருவாக்கி பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர். இது தொடர்பாக நேற்று (மே 30) தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்துள்ளார் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.
இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் கூறியிருப்பதாவது:
"அப்போது எனக்கு 14 வயது. குடும்ப பூஜை ஒன்றில், எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. என் அம்மா அப்போது என்னுடன் இல்லை எனவே என் அருகில் அமர்ந்திருந்த என் அத்தையிடம் அதைப் பற்றி கவலையுடன் தெரிவித்தேன். ஏனெனில் நான் சானிட்டரி நாப்கின் எடுத்து வரவில்லை. என்னருகில் அமர்ந்திருந்த நல்ல குணம் கொண்ட பெண்மணி ஒருவர் நான் கவலையோடு இருப்பதைக் கண்டும், நான் பேசுவதை ஒட்டுக்கேட்டும் என்னிடம் வந்து 'கவலைப்படாதே குழந்தாய், கடவுள் உன்னை (மாதவிடாய் காலத்தில் பூஜையில் கலந்து கொண்டதற்காக) மன்னிப்பார்' என்று கூறினார். அன்றிலிருந்து நான் ஒரு பெண்ணியவாதியாகவும் கடவுள் மறுப்பாளராகவும் ஆகிவிட்டேன்.. அப்போது எனக்கு 14 வயது"
இவ்வாறு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்