தமிழ் சினிமா

மணந்தால் 50 பேர் மட்டும் , இறந்தால் 20 பேர் மட்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உள்ள நேரத்தில் , பொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு தளர்வு எதற்கு?-கஸ்தூரி கேள்வி

செய்திப்பிரிவு

படப்பிடிப்பு தளத்தில் கரோனாவை தடுப்பது மிகப் பெரிய சவால் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணிகளுமே நடைபெறாமல் இருந்தது. சுமார் 50 நாட்களுக்குப் பிறகு இறுதிக்கட்டப் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பு தொடங்க தமிழ்த் திரையுலகினர் அனுமதிக்கோரினார்கள்.

அதில் 20 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க அனுமதியளித்தது தமிழக அரசு. 50 பேரை வைத்து படப்பிடிப்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று பெப்சி அமைப்பும், சின்னத்திரை சங்கமும் வேண்டுகோள் விடுத்தனர். இதனை ஏற்று சுமார் 60 பேருடன் படப்பிடிப்பு தொடங்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதே போன்றே வெள்ளித்திரை படப்பிடிப்புக்கும் அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.

இதனிடையே சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதியளித்திருப்பது தொடர்பாக கஸ்தூரி தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

"சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு 60 பேர் வரை பணியாற்றலாம் என்று இன்று தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் சின்ன திரையை நம்பியிருக்கும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகளுக்கும் இது இனிப்பான செய்தியாக இருந்தாலும் இதில் உள்ள ஆபத்தை உணர்ந்து கலைத்துறையினர் மிக கவனமாக நிதானமாகச் செயல்படுவது அவசியம்.

எங்கோ யாருக்கோ என்ற நிலைமை போய் இதோ இன்று எங்கள் தெருவில் கரோனா தொற்றி விட்டது. பால் விநியோகிப்பவர் பணிப்பெண் இப்படி பல உருவமெடுத்து எங்கள் குடியிருப்பின் வாசல் கதவைத் தட்டிக் கொண்டிருக்கிறது. இது எனக்கு மட்டுமில்லை, எல்லாருக்கும் இதே நிலைதான்.

தமிழகத்தில் கரோனா மிக வேகமாகப் பரவும் நிலையில், அத்தியாவசிய சேவைகளைக் கூட மிகக் கவனமாகக் கொஞ்சம் கொஞ்சமாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில், மணந்தால் 50 பேர் மட்டும் , இறந்தால் 20 பேர் மட்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உள்ள நேரத்தில் , பொழுதுபோக்கு சமாச்சாரத்திற்கு இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு தளர்வு எதற்கு , எதன் அடிப்படையில் என்று மக்கள் கண்டிப்பாகக் கேட்பார்கள்.

நான் இப்பொழுது ஒரு தெலுங்கு தொலைக்காட்சி தொடரில் பணியாற்றி வருகிறேன். சொந்த அனுபவத்தில் சொல்கிறேன், ஷூட்டிங் ஸ்பாட்டில் கரோனாவை தடுப்பது, சமூக இடைவெளி பாதுகாப்பு இதெல்லாம் மிகப் பெரிய சவால்கள். 60 பேர் தினமும் கூடினால் கண்டிப்பாக தொற்று அபாயம் உண்டு. ஏற்கனவே கலைஞர்களை பூதக்கண்ணாடி வைத்து விமர்சிக்கிறார்கள். சினிமாவால் டிவியால் சமூகம் பாழாகுது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இதில் ஷூட்டிங் செய்து கரோனா வந்துவிட்டால் வேறு வினையே வேண்டாம். அப்புறம் மொத்தமாக மூடிவிட்டால் என்ன செய்வது?

தமிழகத்தில் கரோனாவின் வீரியம் எப்பொழுது குறையும் என்று யாருக்கும் தெரியாது. இன்னும் ஒன்றிரண்டு மாதம் படப்பிடிப்புகளை தவிர்ப்பதே உசிதம், ஆனால் எல்லோருக்கும் அதற்குப் பொருளாதாரம் இடம் கொடுக்காது. வயிற்றுப்பாட்டைப் பார்க்கவேண்டுமே ! அதனால் எச்சரிக்கை எச்சரிக்கை கவனம் கவனம். மிகுந்த எச்சரிக்கை தொலைநோக்கு பார்வை, பொறுமை அவசியம்"

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT