தொலைக்காட்சி வர்ணனையாளராகவும், நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதில் மிகவும் பிரபலமானவர் ரம்யா. ‘ஓ காதல் கண்மணி’, ‘மேயாத மான்’, ‘ஆடை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் யூடியூப் மூலம் உடற்பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் இவரை கணிசமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த ஊரடங்கின் தான் கற்றுக் கொண்டவைகளை பற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரம்யா.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த 60 + நாட்களாக மனநல பரிசோதனையில் ஈடுபட்டு வருகிறேன். நான் கற்றுக் கொள்ளும் பாடங்கள் மூலம் எனக்கு வாழ்க்கையில் கிடைத்த சிறந்த விஷயங்களுக்காக நன்றியுடன் உணர்கிறேன்.
உலகில் ஒவ்வொருவருக்கும் பிரச்சினைகள் உள்ளன. யாராக இருந்தாலும் போராட்டம் என்பது ஒன்றுதான். இரக்கம் மற்றும் அன்பை கற்றுக் கொள்வதற்கான நேரம் இது. எந்த வேலையும் பெரியதோ சிறியதோ இல்லை, நாம் அணியும் ஆடைகள், உண்ணும் உணவு, வாழும் வீடு இவை அனைத்தும் ஒரு சிலரின் கடின உழைப்பு மற்றும் வியர்வையால் கிடைத்தவை என்பதை நானும் கற்றுக் கொண்டேன்.
எனவே நாம் எப்போதும் எதையும் இலகுவாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது கடினமானது என்று எனக்கு தெரியும். இது இன்னும் கடினமாக கூட ஆகலாம். ஆனால் மனம் தளரவேண்டாம் நண்பா.. நம்பிக்கை இழக்கவேண்டாம். வரும் ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளுங்கள், அதை தாண்டி எதையும் அதிகம் யோசிக்காதீர்கள்.
அதை எளிதாக மாற்ற எதையும் செய்யுங்கள். மிக முக்கியமாக உங்கள் புன்னகையை இழந்து விடாதீர்கள், உங்களுக்கு அது பொருத்தமாக இருக்காது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.